ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொகுதி மறுவரையறை நிறைவு; ஜம்முவில்-43 காஷ்மீரில்-47 சட்டசபை தொகுதிகள்!
ஜம்மு-காஷ்மீரில் தொகுதிகள் மறுவரையறை செய்வதற்காக, எல்லை நிர்ணய ஆணையம் அமைக்கப்பட்டது.
புதுடெல்லி,
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த சட்டப்பிரிவு 370-ஐ கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு நீக்கியது. அதன்படி ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் தொகுதிகள் மறுவரையறை செய்வதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் மூன்று பேர் கொண்ட எல்லை நிர்ணய ஆணையம் அமைக்கப்பட்டது.
எல்லை நிர்ணயக் குழுவின் அதிகாரபூர்வ உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சானா தேசாய், தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தல் ஆணையர் கே கே ஷர்மா ஆகியோர் இருந்தனர். மேலும், இந்த குழுவில் தேசிய மாநாட்டுக் கட்சி எம்.பி.க்கள் பரூக் அப்துல்லா, முகமது அக்பர் லோன், ஹஸ்னைன் மசூதி, பிரதமர் அலுவலகத்தின் மத்திய இணை மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் பாஜகவின் ஜுகல் கிஷோர் சர்மா ஆகிய ஐந்து பேர் இணை உறுப்பினர்களாக இருந்தனர்.
அதன்படி, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான சட்டப்பேரவை தொகுதிகளை மறுவரையறைப் பணிகளை நிறைவு செய்து, அதற்கான ஆணையை எல்லை நிர்ணய ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் முதல் முறையாக 9 தொகுதிகள், பழங்குடியினருக்கு (எஸ்.டி) ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான அரசாணையும் இன்று வெளியிடப்பட்டது.
இந்தப் பகுதியில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 43 தொகுதிகள் ஜம்மு பிராந்தியத்திலும், 47 தொகுதிகள் காஷ்மீர் பிராந்தியத்திலும் இருக்கும். அரசியல் கட்சி பிரதிநிதிகள், குடிமக்கள், அசோசியேட் உறுப்பினர்கள், சிவில் சமூக குழுக்களுடன் நடந்த கலந்தாலோசனைக்கு பின்னர், 9 சட்டப்பேரவைத் தொகுதிகள் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 6 தொகுதிகள் ஜம்மு பிராந்தியத்திலும், 3 தொகுதிகள் காஷ்மீரிலும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியும் முழுவதுமாக ஒரு மாவட்டத்தில் இருக்க வேண்டும் என்றும், மிகக் குறைந்த நிர்வாக அலகுகள், அதாவது பட்வார் வட்டங்கள் மற்றும் ஜம்மு முனிசிபல் கார்ப்பரேஷனில் உள்ள வார்டுகள் உடைக்கப்படாமல், ஒரே சட்டப்பேரவைத் தொகுதியில் வைக்கப்பட வேண்டும் என்றும் ஆணையத்தால் உறுதி செய்யப்பட்டது.
மேலும், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் முதன்முறையாக சம எண்ணிக்கையிலான சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story