எம்.பி.பி.எஸ். மாணவர்கள் இங்கு ஓராண்டு பயிற்சி பெற அனுமதியா..?


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 May 2022 1:46 AM IST (Updated: 13 May 2022 1:46 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாடுகளில் இருந்து பாதியில் திரும்பிய எம்.பி.பி.எஸ். மாணவர்கள் இங்கு ஓராண்டு பயிற்சி பெற அனுமதி வழங்குவது குறித்து சுகாதார அமைச்சகத்தின் கருத்தை மருத்துவ ஆணையம் கேட்டுள்ளது.

புதுடெல்லி, 

கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் போர் ஆகியவற்றால் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ். படித்து வந்த மாணவர்கள், அங்கு படிப்பை தொடர முடியாமல் நாடு திரும்பி உள்ளனர். உக்ரைன் போரினால் மட்டுமே 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் ‘ஆபரேஷன் கங்கா’ திட்டம் மூலம் நாடு திரும்பினர். இந்த நிலையில் கடைசி ஓராண்டு பயிற்சியை முடிக்காத எம்.பி.பி.எஸ். மாணவர்கள் உள்நாட்டில் பயிற்சியைத் தொடர அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வெளிநாடுகளில் இருந்து பாதியில் திரும்பிய மருத்துவ மாணவர்கள் கடைசி ஓராண்டு பயிற்சியை இங்குள்ள மருத்துவ கல்லூரிகளில் பெறச்செய்வதற்கு அனுமதிப்பது குறித்து 2 மாதங்களில் திட்டம் வகுக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையத்துக்கு கடந்த மாதம் 29-ந்தேதி உத்தரவிட்டது.

ஆனால் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளின்படி, வெளிநாட்டில் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் நாடு திரும்புவோருக்கு உள்நாட்டு மருத்துவ கல்லூரிகளில் பயிற்சி பெற அனுமதிப்பதற்கு விதிமுறை இல்லை என தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் மீது உங்கள் கருத்து என்ன என்று கேட்டு மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு தேசிய மருத்துவ ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் இந்த வாரம் ஒரு கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story