இந்துத்வா எங்கள் ரத்தத்தில் ஊறி போய் உள்ளது: உத்தவ் தாக்கரே


இந்துத்வா எங்கள் ரத்தத்தில் ஊறி போய் உள்ளது: உத்தவ் தாக்கரே
x
தினத்தந்தி 15 May 2022 2:29 AM IST (Updated: 15 May 2022 2:29 AM IST)
t-max-icont-min-icon

இந்துத்வா எங்கள் ரத்தத்தில் ஊறி போய் உள்ளது என உத்தவ் தாக்கரே பேசி உள்ளார்.

பொதுக்கூட்டம்

சிவசேனா கட்சியின் பொது கூட்டம் நேற்று மும்பை பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல் மந்திரி உத்தவ்தாக்கரே கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

இந்துத்வா கொள்கை எங்கள் ரத்ததில் ஊறி உள்ளது. பா.ஜனதா எங்களுடைய கொள்கையை பற்றி பேச தேவையில்லை. தேவேந்திர பட்னாவிஸ் ஒரு காரியக்காரர். பா.ஜனதா மட்டும் தான் இந்துத்வா கொள்கையை பின்பற்றி வருகிறதா? அப்போது நாங்கள் யார்?.

மும்பை மராட்டிய மக்களின் ரத்தம் சிந்தி உருவாக்கப்பட்டது. இதனை யாரும் உடைக்க முயன்றால் நஷ்டம் அடைவார்கள்.

7 பைசா பெட்ரோல் விலை

காஷ்மீர் மாநிலத்தில் இந்து பூசாரி ராகுல் பட் தாக்கப்பட்ட சம்பவத்தில் பா.ஜனதா என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது. காஷ்மீர் பண்டிதர்களுக்கு பாதுகாப்பு வழங்காத மத்திய அரசு எங்களுக்கு இந்துத்வா கொள்கை பற்றி பாடம் பயிற்றுவிக்கிறதா?.

அண்மையில் பிரதமர் மோடி மராட்டியத்தில் பெட்ரோல் விலை குறைக்கப்பட வேண்டும் என உரையாற்றினார். ஆனால் அவர் மாநில அரசுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி. வரியை வழங்காமல் நிலுவையில் இருப்பதை பற்றி தெரிவிக்கவில்லை. ஒரு காலத்தில் 7 பைசா பெட்ரோல் விலை ஏறியதற்கு பா.ஜனதா தலைவர் வாஜ்பாய் மாட்டு வண்டியில் பயணம் செய்து போராட்டம் நடத்தியது நினைவு இருக்கிறதா?

மராட்டியத்தில் தங்களுக்கு ஆட்சி கிடைக்கவில்லை என்ற காரணத்தால் பா.ஜனதா கேவலமான அரசியல் செய்து வருகிறது. அவுரங்காபாத் நகரை சம்பாஜி நகராக மாற்ற நடவடிக்கை எடுப்போம்.

பாபர்மசூதி இடிப்பு

பால்தாக்கரே போன்று சால்வை அணிந்த முன்னா பாய் (ராஜ் தாக்கரே) தற்போது அனுமன் பூஜை நடத்தி நாடகம் ஆடி வருகிறார்.

உங்களை (பா.ஜனதா) மாதிரி அதிகாலையில் பதவி ஏற்பு விழாவை நாங்கள் நடத்தவில்லை. நீங்கள் நடத்தினால் பவித்திரம். நாங்கள் செய்தால் அபத்தம். பாபர்மசூதி இடிப்பு தினத்தில் தேவேந்திர பட்னாவிஸ் இருந்ததாக கூறினார். சம்பவம் நடந்த தினத்தில் அவரின் வயது என்ன என கூற முடியுமா?. அன்றைய தினத்தில் அங்கு மராட்டிய மக்கள் சாா்பில் சிவசேனாவினர் தான் இருந்தார்கள் என மார்தட்டி என்னால் கூற முடியும்.

இந்துத்வா என்பது தொப்பியை வைத்து அடையாளம் காணமுடியாது. புல்லட் ரெயிலை நாங்கள் கேட்கவில்லை. பிறகு எதற்கு ஆமதாபாத்-மும்பைக்கு புல்லட் ரெயில் விட வேண்டும். சிவசேனா தலைமையிலான அரசு மராட்டிய மக்களின் நலனுக்காக சிவ்போஜன் திட்டத்தை தொடங்கியது.

தற்போது அந்த திட்டத்தில் 10 கோடி பேர் தங்கள் வயிற்றை நிரப்பி வருகிறார்கள். இதனை நான் பெருமையுடன் கூறி கொள்கிறேன். இறுதியாக எங்களை பற்றி பொய் சொன்னால் நாங்கள் சும்மா விட மாட்டோம். இந்துத்வா பற்றி எங்களுக்கு அறிவுரை கூற வேண்டாம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story