அந்தமானில் பருவமழை தொடங்கியது; இந்திய வானிலை ஆய்வு மையம்


அந்தமானில் பருவமழை தொடங்கியது; இந்திய வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 16 May 2022 2:08 PM GMT (Updated: 16 May 2022 2:08 PM GMT)

தெற்கு அந்தமான் கடலில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவுக்கு பெருமளவு மழை தென்மேற்கு பருவமழை மூலமே கிடைக்கிறது. இந்தியாவின் விவசாய வருமானத்திற்கு இந்த பருவமழையே முக்கிய காரணியாக உள்ளது. நாடு முழுவதும் நடப்பாண்டு மிகக்கடுமையான வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், தென்மேற்கு பருவமழையை மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். 

இந்த நிலையில், தெற்கு அந்தமான் கடலில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக  இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.   இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது;  ஒரு வாரத்திற்கு முன்பாகவே தெற்கு அந்தமான் கடலில் பருவமழை தொடங்கியுள்ளது. தெற்கு அந்தமான் கடல், நிக்கோபார் தீவுகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் நாட்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அடுத்த 2-3 தினங்களில் அந்தமான் முழுவதும் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவுகிறது. 

வளிமண்டல மேலடுக்கு பகுதியில் நிலவும் சுழல் மற்றும் புயல் காரணமாக இன்னும் 5 நாட்களில் லட்சத்தீவு, தமிழகம் மற்றும் கேரளாவில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். தெற்கு கர்நாடகத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அசானி புயலின் தாக்கம் காரணமாக, கேரளாவில் தென்மேற்கு பருவ மழை வரும் 27 ஆம் தேதி அதாவது 4 நாட்கள் முன்பாகவே  தொடங்கும் என்று  கடந்த வாரம் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 


Next Story