ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு உத்தரவு
ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
புதுடெல்லி,
உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற இந்து மதவழிபாட்டு தலமான காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் 5 பேர் வாரணாசி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த வாரணாசி கோர்ட்டு, ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை முதல் 3 நாட்கள் மசூதி வளாகத்தில் வீடியோ ஆய்வு பணிகள் நடைபெற்றது. அப்போது, இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதியில் இந்து மத கடவுளான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதனால், ஞானவாபி மசூதிக்குள் ஆட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. மசூதிக்குள் வழிபாடு நடத்த ஒரு முறைக்கு 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும், அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, ஞானவாபி மசூதியில் இஸ்லாமியர்கள் மதவழிபாடு நடத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் எனவும் மசூதிக்குள் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளக்கூடாது எனவும் ஞானவாபி மசூதியை நிர்வகித்து வரும் அஞ்சுமன் இண்டிஷிமியா மஸ்ஜத் நிர்வாகம் என்ற இஸ்லாமிய அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடர்ந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை நேற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஞானவாபி மசூதியில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கியது.
அதேவேளை, சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் பகுதி பாதுகாக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மசூதிக்குள் வீடியோ பணிகளை மேற்கொள்தல் மற்றும் அது தொடர்பாக வாரணாசி கோர்ட்டில் நடந்து வரும் விசாரணைக்கு தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்து விட்டது. மேலும், இந்த வழக்கு நாளை மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story