மக்களின் கவனத்தை திசை திருப்ப மத வழிபாட்டு தலங்களை பாஜக குறிவைக்கிறது; மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: மாயாவதி
பாஜக மத மற்றும் வழிபாட்டு தலங்களை குறிவைக்கிறது என்று பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி பாஜகவை கடுமையாக சாடினார்.
லக்னோ,
பாஜக மத மற்றும் வழிபாட்டு தலங்களை குறிவைக்கிறது என்று பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி பாஜகவை கடுமையாக சாடினார்.
உத்தரபிரதேசத்தில் ஞானவாபி மசூதி விவகாரம், தாஜ்மஹாலில் பூட்டப்பட்ட அறைகளை திறக்க வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது மற்றும் மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடம் தொடர்பான வழக்கு உள்ளிட்ட சமீபகால சர்ச்சைக்குரிய விவாதங்களை தொடர்ந்து அவர் இத்தகைய கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
“பாஜகவும் அதன் துணை அமைப்புகளும், குறிப்பாக மத வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து தாக்குகின்றன. வறுமை, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் போன்ற பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப மத தலங்களை பாஜக குறிவைக்கிறது. அது நாட்டை பலவீனப்படுத்தும்.
சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆன நிலையில், சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஞானவாபி, மதுரா, தாஜ்மஹால் மற்றும் பிற இடங்களின் போர்வையில் மக்களின் மத உணர்வுகள் தூண்டப்படும் விதமானது, நாட்டைப் பலப்படுத்தாது, வலுவிழக்கச் செய்யும். இதில் பாஜக கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பிட்ட மதத்துடன் தொடர்புடைய இடங்களின் பெயர்கள் ஒவ்வொன்றாக மாற்றப்பட்டு வருகின்றன. இது அமைதி, நல்லிணக்கம் அல்லது சகோதரத்துவத்தை ஏற்படுத்தாது. மாறாக நாட்டில் பரஸ்பர வெறுப்பையே உருவாக்கும்.
இதுபோன்ற விஷயங்கள் கவலைக்குரியவை. நாட்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இதனால் நாட்டுக்கோ அல்லது சாமானியர்களுக்கோ எந்த பயனும் இல்லை.மக்கள் மற்றும் நாட்டின் நலன் கருதி இதுவே பகுஜன் சமாஜ் கட்சியின் ஆலோசனையாகும்” என்று மாயாவதி கூறினார்.
Related Tags :
Next Story