2024 மக்களவை தேர்தல்; தமிழகத்தில் யாருக்கு, எத்தனை சீட்...? சர்வேயில் தகவல்


2024 மக்களவை தேர்தல்; தமிழகத்தில் யாருக்கு, எத்தனை சீட்...? சர்வேயில் தகவல்
x

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்த தேர்தலில் 15 சதவீத வாக்குகள் கிடைக்கும்.

புதுடெல்லி,

நடப்பு 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலானது வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிற கட்சிகளுடன் இணைந்து தேர்தல் கூட்டணியை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

இந்த சூழலில், தமிழகத்தில் யாருக்கு, எத்தனை சீட்? கிடைக்கும் என்பது பற்றிய தேர்தல் கருத்து கணிப்புகள் வெளிவந்துள்ளன. இந்தியா டுடே மற்றும் டைம்ஸ் நவ் ஆகிய செய்தி நிறுவனங்கள் இந்த கருத்து கணிப்புகளை நடத்தியுள்ளன.

இதில், இந்தியா டுடே வெளியிட்டுள்ள தகவலின்படி, 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைக்கான தேர்தலில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. இந்தியா கூட்டணி மொத்தமுள்ள 39 இடங்களில், 38 இடங்களை கைப்பற்றி இருந்தது. ஒரு தொகுதியை மற்ற கட்சி கைப்பற்றி இருந்தது. இந்தியா கூட்டணியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வும் இடம் பெற்றிருக்கிறது.

நடப்பு 2024-ம் ஆண்டு தேர்தலிலும், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எந்த இடத்திலும் வெற்றி பெறாது என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியா கூட்டணி மொத்தமுள்ள 39 இடங்களையும் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், இந்த ஆண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த இடமும் கிடைக்காது என சர்வே தெரிவிக்கின்றது.

எனினும், கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது, இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 15 சதவீத வாக்குகள் கிடைக்கும். இது முந்தின தேர்தலை (12 சதவீதம்) விட 3 சதவீதம் அதிகம். ஆனால், இந்தியா கூட்டணிக்கு 47 சதவீத வாக்குகளே கிடைக்கும். இது 6 சதவீதம் குறைவு ஆகும். மற்ற கட்சிகள் 38 சதவீத வாக்குகளை பெறும். இது 3 சதவீதம் அதிகம் ஆகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2023-ம் ஆண்டு டிசம்பர் 15-ந்தேதியில் இருந்து நடப்பு ஆண்டு ஜனவரி 28-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் இந்த சர்வே எடுக்கப்பட்டு உள்ளது. இந்த சர்வேயில் மொத்தம் 35,801 பேர் பங்கேற்றுள்ளனர்.

அதனால், கடந்த சில வாரங்களாக நடந்த சமீபத்திய அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் அதன் தொடர்ச்சியாக கூட்டணி கணக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் உள்ளிட்டவை கணக்கில் கொள்ளப்படவில்லை.

இதேபோன்று, டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம், மேட்ரிஸ் நியூஸ் கம்யூனிகேசன் அமைப்புடன் இணைந்து கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. இதில், திமு.க. ஆளும் தமிழகத்தில் பா.ஜ.க. ஒரேயொரு தொகுதியையே கைப்பற்றும் என சர்வே தெரிவிக்கின்றது.

தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணியானது மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 36 தொகுதிகளில் வெற்றி பெற கூடும். அ.தி.மு.க. 2 தொகுதிகளில் வெற்றி பெற கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story