சபரிமலையில் கடந்த 32 நாட்களில் மட்டும் 20.88 லட்சம் பக்தர்கள் தரிசனம்
மண்டல பூஜை விழாவுக்கான நாள் நெருங்கும் நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை லட்சங்களை தாண்டியது.
சபரிமலை,
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை விழா வருகிற 27-ந் தேதி நடக்கிறது. மண்டல பூஜை விழாவுக்காக கடந்த மாதம் 16-ந் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி சரண கோஷம் எழுப்பியபடி கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். நாளுக்குநாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தே கோவிலுக்கு வரவேண்டும் என தேவசம் போர்டு அறிவித்து இருந்தது. அதன்படி கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தே கோவிலுக்கு வருகிறார்கள்.
மண்டல பூஜை விழாவுக்கான நாள் நெருங்கும் நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை லட்சங்களை தாண்டியது. தினமும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வோர் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டியது. இதன்மூலம் கடந்த 32 நாட்களில் மட்டும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எண்ணிக்கை 20.88 லட்சம் என கோவில் நிர்வாகம் அறிவித்தது.
பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் கோவிலில் 18-ம் படி ஏற பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் பலரும் மயங்கி விழும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கோவிலுக்கு வரும் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தனி வரிசை ஏற்படுத்த கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்தது.
இன்று முதல் அந்த வரிசையில் தான் குழந்தைகள், முதியவர்கள் அனுமதிக்கப்பட்டனர். தரிசனம் முடிந்து அவர்கள் தங்கள் குழுவினருடன் சேர்ந்து கொள்ள சன்னிதானம் அருகே காத்திருக்கவும் தேவசம்போர்டு அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் சபரிமலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த தினமும் 18-ம் படி ஏற 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தினமும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் ஆன்லைன் முன்பதிவு முறை ரத்தாகுமா? என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக தேவசம் போர்டு அதிகாரிகள் கூறும்போது ஆன்லைன் முன்பதிவு முறை ரத்து செய்யப்பட மாட்டாது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளது.