அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 21 பேரிடம் ரூ.1 கோடி மோசடி; 2 பேர் மீது வழக்கு
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 21 பேரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
வேலை வாங்கி தருவதாக...
பெங்களூரு பனசங்கரி 3-வது ஸ்டேஜில் வசித்து வருபவர் சவுடேகவுடா (வயது 66). இவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஆவார். இந்த நிலையில் பெங்களூரு பத்மநாபநகரில் வசித்து வரும் சந்திரசேகர் என்பவருடன் சவுடேகவுடாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
அப்போது சவுடேகவுடாவிடம், சந்திரசேகர் உங்களுக்கு தெரிந்த வாலிபர்களுக்கு பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதற்கு பிரகாஷ் என்பவர் உதவி செய்வதாகவும் கூறி இருந்தார்.
ரூ.1 கோடி மோசடி
இதனை நம்பிய சவுடேகவுடா தனக்கு தெரிந்த வாலிபர்களிடம் இருந்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடியே 8 லட்சத்தை வசூலித்து சந்திரசேகர், பிரகாசிடம் கொடுத்து உள்ளார். ஆனால் 2 பேரும் சேர்ந்து வேலை வாங்கி தராமலும், பணத்தை திரும்ப தராமலும் மோசடி உள்ளனர்.
இதுகுறித்து பனசங்கரி போலீஸ் நிலையத்தில் சவுடேகவுடா புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் சந்திரசேகர், பிரகாஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் பனசங்கரி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.