பெங்களூருவில் பட்டாசு வெடித்த போது 23 பேருக்கு கண்ணில் காயம்
பெங்களூருவில் பட்டாசு வெடித்த போது 23 பேருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்து மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூருவில் பட்டாசு வெடித்த போது 23 பேருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது தெரியவந்து உள்ளது. அதாவது 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை பெங்களூருவில் பட்டாசு வெடித்த போது 8 பேருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் பட்டாசு வெடித்தபோது 15 பேருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டு இருந்தது.
காயம் அடைந்த 23 பேரில் 11 பேர் மின்டோ ஆஸ்பத்திரியிலும், 12 பேர் நாராயண நேத்ராலயா ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர். நாராயண நேத்ராலயாவில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில் 9 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஆனால் 3 பேருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். இதுபோல மின்டோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 11 பேரில் 10 பேர் வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.