எண்ணெய் லாரி மீது மணிக்கு 230 கி.மீ. வேகத்தில் மோதிய ரோல்ஸ் ராய்ஸ் கார்... ரேசில் பறிபோன 2 உயிர்கள்; பரபரப்பு பின்னணி...!!


எண்ணெய் லாரி மீது மணிக்கு 230 கி.மீ. வேகத்தில் மோதிய ரோல்ஸ் ராய்ஸ் கார்... ரேசில் பறிபோன 2 உயிர்கள்; பரபரப்பு பின்னணி...!!
x

மும்பை நோக்கி மணிக்கு 230 கி.மீ. வேகத்தில் சென்ற ரோல்ஸ் ராய்ஸ் கார், எண்ணெய் லாரி மீது மோதியதில் லாரி தீப்பிடித்து எரிந்து 2 பேர் உயிரிழந்தனர்.

புதுடெல்லி,

டெல்லியில் இருந்து மும்பை நோக்கி செல்லும் விரைவு சாலையில் ஆடம்பர ரக காரான ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்று விரைவாக சென்று கொண்டிருந்தது. அரியானாவின் நூ பகுதியில் வந்தபோது, எண்ணெய் லாரி ஒன்றின் மீது மோதி விபத்தில் சிக்கியது.

இதில் லாரி தீப்பிடித்து எரிந்ததில் அதில் இருந்த ஓட்டுநர் ராம்பிரீத், அவரது உதவியாளர் குல்தீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் பல்வேறு விசயங்கள் நடந்துள்ளன என கூறப்படுகின்றது. ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்தவர்கள் காரை அதிவேகத்தில் ஓட்டியும், வலது மற்றும் இடது என இரண்டு பக்கங்களிலும் வளைத்து ஓட்டியும் சென்றுள்ளனர் என நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

காரில் இருந்த திவ்யா, தஸ்பீர் மற்றும் விகாஸ் 3 பேரும் காயமடைந்தனர். ரூ.10 கோடி மதிப்பிலான கார் எரிந்து போனது. லாரியும் எரிந்து விட்டது. 5 முதல் 6 நிமிடங்களில் எல்லாம் முடிந்து விட்டது. காருக்கு பின்னால் அவர்களின் உறவினர்களும் வேறு ஆடம்பர ரக கார்களில் பின்தொடர்ந்துள்ளனர் என போலீசார் கூறுகின்றனர்.

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு முன்பும், பின்பும் பாதுகாப்புக்காக கார்கள் சென்றுள்ளன. அதில் இருந்த நபர்கள், விபத்து நடந்ததும், காரில் இருந்தவர்களை உடனடியாக வெளியே பாதுகாப்பாக தூக்கி சென்று காப்பாற்றி உள்ளனர்.

காரை விரைவாக ஓட்டி செல்ல முற்பட்ட அதன் ஓட்டுநரால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது என ஒருவர் கூறியுள்ளார். சாலையில் எண்ணெய் லாரி ஓரத்தில் நின்று, வளைவில் திரும்புவதற்காக காத்திருந்தது. அந்த சாலை காலியாக இருந்ததும், எண்ணெய் லாரியின் ஓட்டுநர் லாரியை வளைத்து, திருப்பியுள்ளார்.

ஆனால், அந்த கார் விரைவாக வந்துள்ளது என கூறுகிறார். மணிக்கு 230 கி.மீ. வேகத்தில் கார் சென்றுள்ளது என கட்டுப்பாட்டு அறை தகவல் தெரிவிக்கின்றது.

இந்த விபத்தில், லாரி ஓட்டுநரை பொறுப்பாக்கி விட்டனர். ஏழைகளான அவர்கள் இருவரும் வாழ்க்கைக்காக வேலை செய்து வந்தபோது, ஸ்டண்ட்டுக்காக காரை விரைவாக ரேசில் செலுத்துவது போன்று ஓட்டியும், நெடுஞ்சாலையில் முன்பும், பின்பும் ஓட்டி சென்றும் உள்ளனர் என மற்றொரு நபர் கூறியுள்ளார்.

எனினும், இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என நூ நகர உதவி காவல் துணை ஆய்வாளர் அசோக் குமார் கூறியுள்ளார்.


Next Story