230 கி.மீ. வேகம்... ரோல்ஸ் ராய்ஸ் கார் விபத்தில் காயம் அடைந்த கூபர் குழும இயக்குநர்


230 கி.மீ. வேகம்... ரோல்ஸ் ராய்ஸ் கார் விபத்தில் காயம் அடைந்த கூபர் குழும இயக்குநர்
x

14 வாகனங்களுடன் அணிவகுத்து சென்ற ரோல்ஸ் ராய்ஸ் கார் விபத்தில் கூபர் குழும இயக்குநர் விகாஸ் மாலு காயம் அடைந்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் இருந்து மும்பை நோக்கி செல்லும் விரைவு சாலையில் ஆடம்பர ரக காரான ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்று விரைவாக சென்று கொண்டிருந்தது. அரியானாவின் நூ பகுதியில் வந்தபோது, எண்ணெய் லாரி ஒன்றின் மீது மோதி விபத்தில் சிக்கியது.

இதில் லாரி தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த ஓட்டுநர் ராம்பிரீத், அவரது உதவியாளர் குல்தீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்த விபத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய விசயங்கள் நடந்துள்ளன என கூறப்படுகிறது. ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்தவர்கள் காரை அதிவேகத்தில் ஓட்டியும், வலது மற்றும் இடது என இரண்டு பக்கங்களிலும் வளைத்து ஓட்டியும் சென்றுள்ளனர் என நேரில் கண்டவர்கள் கூறினர்.

காரில் இருந்த திவ்யா, தஸ்பீர் மற்றும் விகாஸ் 3 பேரும் காயமடைந்தனர். ரூ.10 கோடி மதிப்பிலான கார் எரிந்து போனது. லாரியும் எரிந்து விட்டது. 5 முதல் 6 நிமிடங்களில் எல்லாம் முடிந்து விட்டது. காருக்கு பின்னால் அவர்களின் உறவினர்களும் வேறு ஆடம்பர ரக கார்களில் பின்தொடர்ந்துள்ளனர் என போலீசார் கூறினர்.

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு முன்பும், பின்பும் பாதுகாப்புக்காக கார்கள் சென்றுள்ளன. அதில் இருந்த நபர்கள், விபத்து நடந்ததும், காரில் இருந்தவர்களை உடனடியாக வெளியே பாதுகாப்பாக தூக்கி சென்று காப்பாற்றினர் என போலீசார் கூறியுள்ளனர்.

காரை விரைவாக ஓட்டி செல்ல முற்பட்ட அதன் ஓட்டுநரால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது என ஒருவர் கூறியுள்ளார். சாலையில் எண்ணெய் லாரி ஓரத்தில் நின்று, வளைவில் திரும்புவதற்காக காத்திருந்தது. அந்த சாலை காலியாக இருந்ததும், எண்ணெய் லாரியின் ஓட்டுநர் லாரியை வளைத்து, திருப்பியுள்ளார்.

கார் மணிக்கு 230 கி.மீ. வேகத்தில் சென்றுள்ளது என கட்டுப்பாட்டு அறை தகவல் தெரிவிக்கின்றது. ஸ்டண்ட்டுக்காக காரை விரைவாக ரேசில் செலுத்துவது போன்று ஓட்டியும், நெடுஞ்சாலையில் முன்பும், பின்பும் ஓட்டி சென்றும் உள்ளனர் என மற்றொரு நபர் கூறியுள்ளார்.

எனினும், இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என நூ நகர உதவி காவல் துணை ஆய்வாளர் அசோக் குமார் கூறியுள்ளார்.

இந்த நிலையில், விபத்தில் கூபர் குழும இயக்குநர் விகாஸ் மாலு சிக்கி காயமடைந்து உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது. 2 பேரை பலி கொண்ட இந்த விபத்து பற்றி அவரிடம் அரியானா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் விபத்தில் சிக்கியபோது, அதில் இருந்த 3 பேரில் விகாசும் ஒருவர். அவர் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

அவர் சென்ற ரோல்ஸ் ராய்ஸ் காருடன் பாதுகாப்புக்காக 14 கார்கள் முன்னும், பின்னும் அணிவகுத்து சென்றன. இதுபற்றிய வீடியோ ஒன்று, சுங்க சாவடியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ளது. அதில், கடந்த 22-ந்தேதி காலை 11 மணியளவில் இந்த கார்கள் வரிசையாக கடந்து சென்றுள்ளன.

ஆனால், எந்தவொரு வாகனமும் சுங்க சாவடியில் கட்டணம் செலுத்துவதற்காக நிற்கவில்லை. விபத்தில் சிக்கிய காரில் இருந்த மற்றொரு நபரிடம் சிகிச்சைக்கு பின்னர் விசாரணை நடத்தப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.

அறிவியல் பரிசோதனைக்கு பின்பே, காரின் சரியான வேகம் பற்றிய விவரங்கள் கிடைக்க பெறும் என்று நூ மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு நரேந்திர பிஜராணியா கூறியுள்ளார்.

யார் இந்த விகாஸ் மாலு?

இந்தி திரையுலகில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நகைச்சுவை நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் சதீஷ் சந்திர கவுசிக் (வயது 66). கடந்த மார்ச் 9-ந்தேதி அதிகாலையில் உயிரிழந்து விட்டார்.

அவர் தனது நண்பரான விகாஸ் மாலு என்பவரின் பண்ணை இல்லத்தில் ஹோலி பண்டிகையை சிறப்புடன் கொண்டாடி விட்டு, நடனம் ஆடிய களைப்பில் இரவில் தூங்க சென்றார். பின்னர் சுவாச பாதிப்பு என கூறி நள்ளிரவில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது என கூறப்பட்டது. இந்த சூழலில், சதீஷ் கவுசிக்கின் மரணத்திற்கு பின்னணியில் பல மர்மங்கள் உள்ளன என சர்ச்சை எழுந்தது.

அவர் ஹோலி கொண்டாடிய டெல்லி பண்ணை இல்லத்தில் உள்ள சி.சி.டி.வி.யின் 7 மணிநேரம் வீடியோ காட்சிகளை டெல்லி போலீசார் ஆய்வு செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், 98 சதவீதம் இதய பகுதியில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது என்றும் போதை பொருள் எதுவும் இல்லை என பரிசோதனை மாதிரியும் தெரிவித்தது.

எனினும், பண்ணை இல்ல உரிமையாளர் மற்றும் கூபர் குழும இயக்குநரான விகாசின் 2-வது மனைவி அளித்த குற்றச்சாட்டு பரபரப்பு ஏற்படுத்தியது. அதில், சதீஷ் ஜிக்கும், எனது கணவருக்கும் இடையே வர்த்தக தொடர்புகள் உண்டு. கடந்த ஆண்டு ஆகஸ்டில், சதீஷ் ஜி முன்பு கொடுத்த ரூ.15 கோடியை திருப்பி தரும்படி துபாயில் வைத்து, எனது கணவரிடம் கேட்டார்.

ஆனால், எனது கணவர் இந்தியாவில் வைத்து தொகையை திருப்பி தருகிறேன் என கூறினார் என்று விகாசின் 2-வது மனைவி போலீசில் கூறினார்.

ரஷிய அழகிகள்

தொடர்ந்து அவர் புகாரில், இதுபற்றி கணவர் விகாசிடம் கேட்டபோது, சதீஷ் ஜியிடம் பணம் வாங்கினேன். ஆனால், கொரோனா காலத்தில் பணம் தொலைந்து விட்டது என கூறினார். பெரிய தொகையை திருப்பி தரும் எண்ணத்தில் விகாஸ் இல்லை.

சதீஷ் கவுசிக்கை எதிர்கொள்ள புளூ பில்ஸ் மற்றும் ரஷிய அழகிகளை பயன்படுத்துவேன் என அவர் என்னிடம் கூறினார். அதனாலேயே, இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தும்படி போலீசாரிடம் தெரிவித்து உள்ளேன் என்று விகாஷின் 2-வது மனைவி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர், விகாஸ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து, கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டார் என அவரது 2-வது மனைவி புகார் ஒன்றில் குற்றச்சாட்டாக தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

பாலியல் வன்கொடுமை

அந்த புகாரில், விகாசின் மகனும் என்னை பாலியல் வன்கொடுமை செய்ய தொடங்கினார். இதனை முற்றிலும் தாங்கி கொள்ள முடியாமல் கடந்த அக்டோபரில் வீட்டை விட்டு வெளியேறினேன் என்று விகாசின் 2-வது மனைவி அந்த புகாரில் குறிப்பிட்டார்.

எனினும், விகாசின் முதல் மனைவியின் மைனர் மகனும் போக்சோ சட்டத்தின் கீழ், விகாசின் 2-வது மனைவி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளார் என போலீசார் கூறினர். ஆனால், புகாரை பெற்று கொண்ட போலீசார் அதன்பின்னர் இருவர் மீதும் கைது போன்ற நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

திட்டமிட்ட படுகொலை

டெல்லியை சேர்ந்த தொழிலதிபரான விகாஸின் 2-வது மனைவி புகாரில், இந்தியாவிலும், துபாயிலும் எங்களை கவுசிக் அடிக்கடி சந்திப்பது வழக்கம். 3 ஆண்டுகளுக்கு முன் முதலீட்டு நோக்கத்திற்காக கொடுத்த தொகையை திருப்பி தரும்படி துபாயில் வைத்து, கவுசிக் கேட்டார்.

முதலீட்டிலும் ஈடுபடாமல், தொகையையும் திருப்பி தராமல் மோசடி செய்தது பற்றி கவுசிக் உணர்ந்து உள்ளார். அதனை விகாசிடமும் கூறியுள்ளார் என புகாரில் கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் எனது கணவரின் பண்ணை இல்லத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் நடிகர் சதீஷ் கவுசிக் கலந்து கொண்டார். வந்த இடத்தில் அவரது உடல்நலம் பாதிப்படைந்தது. கவுசிக்கிற்கு சில மருந்துகள் கொடுக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

அதற்கு தனது கணவரே ஏற்பாடு செய்திருந்தார். அந்த பண்ணை இல்லத்தில் சில சர்ச்சைக்குரிய மருந்து பொருட்களும் இருந்தன என கூறினார். இதேபோன்று, போலீசார் சர்ச்சைக்குரிய சில மருந்துகளை கைப்பற்றினர். இதனால், நடிகர் கவுசிக்கின் மரணத்தில் பல சந்தேகங்கள் கிளம்பின. இது திட்டமிட்ட படுகொலை என விகாஸின் 2-வது மனைவி கூறினார்.

தாவூத் இப்ராகிம்

தொடர்ந்து கூறும்போது, விகாஸ் மாலுவுக்கு நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் உள்பட பலருடன் தொடர்பு உள்ளது. எங்களது வீட்டுக்கு அடிக்கடி வரும் பல்வேறு நபர்களின் புகைப்படங்கள் என்னிடம் உள்ளன. எங்கள் வீட்டிற்கு வந்த அனாஸ் என்பவர் தாவூத் இப்ராகிமின் மகன் என விகாஸ் என்னிடம் கூறினார். எங்கள் வீட்டுக்கு வந்த முஸ்தபா என்பவர் தாவூத் இப்ராகிமின் வலதுகரம் போல் செயல்படுபவர் என்று அவர் கூறியது அதிர்ச்சி ஏற்படுத்தியது என்றும் கூறினார்.

கவுசிக் மனைவி

எனினும், சதீஷ் கவுசிக்கின் மனைவி சசி கவுசிக் கூறும்போது, எனது கணவரின் மறைவுக்கு பிறகு அவருக்கு அவதூறு ஏற்படுத்த விகாசின் மனைவி ஏன் முயற்சிக்கிறார் என எனக்கு தெரியவில்லை. அவருக்கு கணவரிடம் இருந்து பணம் கிடைக்க வேண்டும் என விரும்புகிறார். அதனால், இந்த விவகாரத்தில் சதீஷை தொடர்புப்படுத்தி உள்ளார் என கூறினார்.


Next Story