சூடானில் இருந்து 231 இந்தியர்கள் இன்று நாடு திரும்பினர்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்


சூடானில் இருந்து 231 இந்தியர்கள் இன்று நாடு திரும்பினர்:  மத்திய மந்திரி ஜெய்சங்கர்
x

சூடானில் இருந்து 231 இந்தியர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான சண்டை பல வாரங்களாக தீவிரமடைந்த நிலையில், வெளிநாட்டினரை மீட்க ஏதுவாக, போர்நிறுத்த ஒப்பந்தம் அமலானது.

இதனை தொடர்ந்து, பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டு குடிமக்களை கப்பல்கள், விமானங்கள் கொண்டு மீட்டு வருகின்றன. இந்திய விமான படையின் சி-130 ஜே ரக விமானம், சி-17 ரக போக்குவரத்து விமானம், 2 கடற்படை கப்பல்களும் மீட்பு பணிக்காக சென்று உள்ளன.

இதனை தொடர்ந்து, ஆபரேசன் காவிரி திட்டத்தின் கீழ், இந்த மீட்பு பணியில் இண்டிகோ விமான நிறுவனமும் இணைந்து உள்ளது. இதன்படி, விமானத்தில் 231 இந்தியர்கள் இன்று சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதுபற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டரில் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், புதுடெல்லிக்கு மற்றொரு விமானம் வந்து உள்ளது. 231 இந்தியர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர் என பதிவிட்டு உள்ளார்.

அரசின், இந்தியர்களை மீட்கும் பணியில் இணைந்து உள்ள இண்டிகோ விமான நிறுவனம் ஏ321 ரக விமானம் ஒன்றை இயக்கி இதற்காக பயன்படுத்தி வருகிறது. அரசுக்கு ஆதரவாக இன்னும் பல மீட்பு விமானங்களை அனுப்பும் முடிவில் அந்நிறுவனம் உள்ளது.

இதன்படி, இந்த வாரத்தில் 2 விமானங்களை இயக்கி 450-க்கும் மேற்பட்ட இந்தியர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி கொண்டு வரும் பணியில் ஈடுபடும்.

கடந்த வியாழனுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், மீட்பு பணிக்கு ஏதுவாக, சூடான் ராணுவம், போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்புக்கு அனுமதி அளித்து உள்ளது. சவுதி அரேபியா மற்றும் அமெரிக்க அரசுகளின் முயற்சியால் இந்த நீட்டிப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story