வன காவலர் பணிக்கான தேர்வில் 25 கி.மீ. நடந்த நபர் மரணம்
எழுத்து தேர்வில் சலீம் வெற்றி பெற்றதும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல்தகுதி தேர்வுக்காக, பாலகாட்டுக்கு சென்றுள்ளார்.
பாலகாட்,
மத்திய பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் வன காவலர் பணிக்கான தேர்வு நடந்தது. இதில் சிவபுரி மாவட்டத்தில் இருந்து வந்த சலீம் மவுரியா (வயது 27) என்ற இளைஞர் கலந்து கொண்டார். எழுத்து தேர்வில் சலீம் வெற்றி பெற்றதும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல்தகுதி தேர்வுக்காக, பாலகாட்டுக்கு சென்றுள்ளார்.
உடல்தகுதி தேர்வில் 108 பேர் பங்கேற்றனர். 4 மணிநேரத்தில், 25 கி.மீ. தொலைவை அவர்கள் நடந்தே சென்று முடிக்க வேண்டும். காலை 6 மணியளவில் நடைக்கான தேர்வு தொடங்கியது. திரும்பி வரும்போது, 3 கி.மீ. மீதமிருக்கும்போது, சலீமின் உடல்நிலை மோசமடைந்தது.
அவர் தனியார் மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டார். எனினும், அவர் உயிரிழந்து விட்டார். தேர்வில் பங்கேற்ற 108 பேரில் 104 பேர் குறிப்பிட்ட நேரத்திற்குள் நடந்து முடித்து விட்டனர் என மண்டல வன அதிகாரி அபினவ் பல்லவ் கூறியுள்ளார்.