உங்கள் மகனை பயங்கரவாதியின் பெயரை கூறி அழைப்பீர்களா?; பேராசிரியரை வெளுத்துவாங்கிய மாணவன் - முழு உரையாடல்
வகுப்பறையில் மாணவனின் பெயரை மும்பை தாக்குதல் பயங்கரவாதியின் பெயரான 'கசாப்' என்று பேராசிரியர் கூறினார்.
பெங்களூரு,
மராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல், துப்பாக்கிச்சூட்டில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு நடத்தியது.
மும்பை தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் கைது செய்யப்பட்டான். பின்னர், கசாப் தூக்கிலிடப்பட்டான்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு உடுப்பியில் மனிப்பல் தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை வகுப்பு நடந்தபோது இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவன் ஒருவரிடம் பேராசிரியர் பெயர் என்ன என்று கேட்டுள்ளார். தனது பெயரை அந்த மாணவன் கூற ' நீங்கள் கசாப் போன்றவன்' என்றார். மாணவனின் பெயரை தவறாக கூறி பாகிஸ்தான் பயங்கரவாதியான கசாப்பின் பெயரை பேராசிரியர் கூறினார்.
தனது பெயரை மாற்றி பயங்கரவாதியின் பெயரான கசாப் என்று மாற்றி கூறியதால் ஆத்திரமடைந்த மாணவன் பேராசிரியரை வெளுத்துவாங்கினார்.
மாணவன் - பேராசிரியர் உரையாடல் பின்வறுமாறு:-
மாணவன்: இல்லை... இதுபோன்ற நகைச்சுவை ஏற்றுக்கொள்ளமுடியாது. எனது மதம் குறித்து மிகவும் கீழ்தனமாக நீங்கள் பேசக்கூடாது.
பேராசிரியர்: இல்லை இல்லை நீ என் மகன் போன்றவன்
மாணவன்: இல்லை. என் தந்தை இவ்வாறு கூறினால் அவர் எனக்கு தந்தையே இல்லை
ஆசிரியர்: இது நகைச்சுவையான பேச்சு (கசாப் என்று கூறியது)
மாணவன்: இல்லை, இது நகைச்சுவை அல்ல. 26/11 (மும்பை தாக்குதல்) நகைச்சுவை அல்ல. இந்நாட்டில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவனாக வாழ்வது, இது போன்ற நிகழ்வுகளை தினமும் சந்திப்பது நகைச்சுவையல்ல.
பேராசிரியர்: நீ என் மகன் போன்றவன்
மாணவன்: இல்லை... இல்லை... உங்கள் மகனிடம் இவ்வாறு பேசுவீர்களா? பயங்கரவாதியின் பெயரை கூறி உங்கள் மகனை நீங்கள் அழைப்பீர்களா?
பேராசிரியர்: இல்லை.
மாணவன்: வகுப்பறையில் இத்தனை பேர் முன்னிலையில் நீங்கள் என்னை எப்படி அவ்வாறு அழைக்கலாம்?
பேராசிரியர்: மன்னித்துவிடு என்று கூறிவிட்டேன்.
மாணவன்: நீங்கள் பேராசிரியர்... நீங்கள் கற்பிக்க வேண்டும்
பேராசிரியர்: மன்னித்துவிடு என்று கூறிவிட்டேன்
மாணவன்: நீங்கள் என்னை அவ்வாறு அழைத்திருக்கக்கூடாது
பேராசிரியர்: மன்னித்துவிடு
மாணவன்: மன்னித்துவிடு என்று நீங்கள் கூறுவதால் எவ்வாறு நீங்கள் சிந்திர்க்கிறீர்கள்... உங்களை இங்கு எவ்வாறு வெளிப்படுத்திக்கொள்கிறீர்கள் என்பது மாறாது' என்றார்.
45 விநாடிகள் எடுக்கப்பட்ட இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் மாணவனை பயங்கரவாதி கசாப்பின் பெயரை கூறி அழைத்த பேராசிரியர் ரபிந்திரநாத்தை சஸ்பெண்ட் செய்த கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பெயரை மாற்றி கசாப் என்று கூறிய பேராசிரியரிடம் மாணவன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூகவலைதளத்தி வைரலாகி வருகிறது.