கர்நாடகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பு: இன்று முதல் அமல்


கர்நாடகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பு: இன்று முதல் அமல்
x

கர்நாடகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது. அது இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் அரசுக்கு ரூ.1,500 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு:

டெல்லியில் கடந்த முறை நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சிலிங் கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) விதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த வரி விதிப்பு ஒவ்வொரு மாநிலத்திலும் அக்டோபர் மாதம் 1-ந் தேதி (அதாவது) இன்று முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஜி.எஸ்.டி. கவுன்சிலிங் கூட்டம் நடைபெற்ற போது கர்நாடகத்தில் சட்டசபை கூட்டம் எதுவும் நடைபெறவில்லை.

இதனால் கர்நாடகத்தில் ஜி.எஸ்.டி. விதிப்பதில் மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்படாமல் இருந்தது. இதையடுத்து, சட்டசபை துணை குழு கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜி.எஸ்.டி. விதிப்பது குறித்து கர்நாடக சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு தாக்கல் செய்யப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

இந்த சட்ட திருத்தத்திற்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட்டும் ஒப்புதல் வழங்கி இருந்தார். இதையடுத்து, கர்நாடகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பதை அமல்படுத்தி அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. ஆன்லைன் விளையாட்டு, ஆன்லைன் சூதாட்டம், கேசினோ, பிற ஆன்லைன் சூதாட்டங்கள், குதிரை பந்தயங்களுக்கும் இந்த 28 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட உள்ளது. இதன்மூலம் அரசுக்கு ரூ.1,500 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story