5 ஆண்டுகளில் 28 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை; மத்திய அரசு தகவல்


5 ஆண்டுகளில் 28 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை; மத்திய அரசு தகவல்
x

நாட்டில் 2017 முதல் 2021 வரையிலான 5 ஆண்டுகளில் 28 ஆயிரத்திற்கும் கூடுதலான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.



புதுடெல்லி,


நாடாளுமன்றத்தின் மேலவையில் மத்திய வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் பேசும்போது, 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் நாட்டில் 28 ஆயிரத்து 572 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என கூறியுள்ளார்.

இதன்படி, 2017-ம் ஆண்டில் 5,955 விவசாயிகளும், 2018-ம் ஆண்டில் 5,763 பேரும், 2019-ம் ஆண்டில் 5,957 பேரும், 2020-ம் ஆண்டில் 5,579 பேரும், 2021-ம் ஆண்டில் 5,318 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த 5 ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் மராட்டியம் மற்றும் கர்நாடகாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்துள்ளதுடன், இந்த பட்டியலில் முதல் மற்றும் 2-வது இடத்தில் அவை உள்ளன என்றும் மந்திரி தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து அவர், பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து உள்ளது. பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்க செய்வதற்கான நடவடிக்கைகள், பிரதம மந்திரி பசல் பீம யோஜனா உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன என அவர் கூறியுள்ளார்.


Next Story