டெல்லி: நைஜீரியாவை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு..!!
டெல்லியில் வசிக்கும் நைஜீரியாவை சேர்ந்த 35வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கடந்த சில மாதங்களாக குரங்கம்மை தொற்று குறித்து மத்திய மற்றும் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சகங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தன.
இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருந்த நிலையில், கடந்த 14 ஆம் தேதி இந்தியாவிலேயே முதல் முறையாக கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து கேரள மாநிலத்தில் கொல்லம், கண்ணூர், மலப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று பேருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது.
அதில் கொல்லத்தைச் சேர்ந்தவர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிவிட்டார். இந்த சூழலில் வெளிநாட்டில் குரங்கு அம்மை பாதித்த நிலையில் ஊர் திரும்பிய திருச்சூரை சேர்ந்த இளைஞர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இந்தியாவில் குரங்கு அம்மை நோய்க்கு இறந்த முதல் நபர் என அவர் கருதப்பட்டுள்ளார்.
இதனிடையே கேரளாவில் 3, டெல்லி மற்றும் ஆந்திராவில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் டெல்லியில் வசிக்கும் நைஜீரியாவை சேர்ந்த 35வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் வெளிநாடுகளுக்கு எந்தவித பயணமும் மேற்கொள்ளவில்லை. அவர் தற்போது டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த ஐந்து நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. உடலில் கொப்புளங்களும் இருப்பதால், அவரை தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் டெல்லியில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல இந்தியாவில் குரங்கு அம்மை நோய் தொற்றின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக கேரளாவில் முதலில் குரங்கு அம்மை பாதிப்பு ஒருவருக்கு கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அனைத்து மாநில அரசுகளுக்கும் வழிகாட்டு நெறிகளுடன் கூடிய கடிதத்தை மத்திய சுகாதாரத்துறை அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.