பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது; 225 கிராம் தங்க நகைகள் பறிமுதல்


பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது; 225 கிராம் தங்க நகைகள் பறிமுதல்
x

பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 225 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

சிவமொக்கா;

சங்கிலி பறிப்பு

சிவமொக்கா (மாவட்டம்) டவுன் பகுதியில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் சாலையில் நடந்து செல்லும் பெண்களை வழிமறித்து தங்கச்சங்கிலி பறிப்பில் மர்மநபர்கள் ஈடுபடுவதாக டவுன் போலீசாருக்கு புகார்கள் வந்தன. அந்த புகாரின் பேரில் போலீசார் டவுன் பகுதியில் ரோந்து சென்று வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 23-ந் தேதி சிவமொக்கா டவுன் சேஷாத்ரிபுரம் பகுதியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம், அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்றனர். உடனே அந்த பெண் இதுகுறித்து கோட்டை போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து சங்கிலி பறிப்பில் ஈடுபடுபவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சாலையில் செல்லும் பெண்களை மிரட்டி தங்கச்சங்கிலி மற்றும் பணத்தை பறித்து வந்தது தெரியவந்தது.

பல்வேறு வழக்குகள்

மேலும், அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அசோக் குமார்(வயது 24), அஸ்வின்(23), விகாஸ் குமார்(22) ஆகியோர் என்பதும், அவர்கள் 3 பேர் மீதும் துங்கா நகர், தொட்டபேட்டை போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, கொள்ளை போன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 2 ேமாட்டார் சைக்கிள்கள் மற்றும் 225 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். போலீசாரின் இந்த துரித நடவடிக்கையால் சிவமொக்காவில் நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.


Next Story