மணிப்பூரில் மீண்டும் புதிதாக வன்முறை: 3 பேர் சுட்டுக்கொலை: 8 மாவட்டங்களில் ஊரடங்கு நேரம் நீட்டிப்பு


மணிப்பூரில் மீண்டும் புதிதாக வன்முறை: 3 பேர் சுட்டுக்கொலை:  8 மாவட்டங்களில் ஊரடங்கு நேரம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 5 Aug 2023 10:24 AM IST (Updated: 5 Aug 2023 12:19 PM IST)
t-max-icont-min-icon

மணிப்பூரில் மீண்டும் புதிதாக வெடித்தக் கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இம்பால்,

மணிப்பூரில் நேற்று இரவு மீண்டும் புதிதாக வெடித்தக் கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் மூவரும் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக குகி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. குவாக்டா பகுதியில் தான் இந்தக் கலவரம் நடந்துள்ளது. கலவரத்தால் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பல்வேறு பகுதிகளிலும் அது வாபஸ் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு பகுதிகளில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு திரும்பப்பெறப்பட்டுள்ளது.

இது குறித்து பிஷ்ணுபூர் காவல்துறை தரப்பில், "மத்தியப் படைகளின் பாதுகாப்பு வளையத்தில் இருந்த பாதுகாப்புப் பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் குவாக்டா பகுதிக்குள் கலவரக்காரர்கள் நுழைந்தனர். பாதுகாக்கப்பட்ட பகுதியைத் தாண்டி வந்த சிலர் மைத்தேயி மக்கள் வசிக்கும் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து மீண்டும் கலவரம் வெடித்தது. இதில் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர். குகி சமூகத்தினர் வீடுகள் பல எரிக்கப்பட்டுள்ளன. சம்பவ பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆயுதப் படைகளுக்கும் மைத்தேயி சமூகத்தினருக்கும் இடையே இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த மோதலில் 17 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் நேற்று வெடித்தக் கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் அப்பா, மகன் ஆகிய இருவர் மற்றும் பக்கத்து வீட்டில் இருந்த மற்றொருவரும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிஷ்ணுபூர் மாவட்டத்தில் இரண்டு ஆயுதக்கடங்குகளில் ஆயுதங்கள், தோட்டாக்கள் சூறையாடப்பட்ட நிலையில் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. குகி இனமக்கள் நடத்திய தாக்குதலில் மைத்தேயி இனமக்கள் 3 பேர் உயிரிழந்து உள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை சுமார் 150 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் அங்கு வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருவது அங்குள்ள மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனை அடுத்து வன்முறை மீண்டும் தொடங்கியதால் 8 மாவட்டங்களில் ஊரடங்கு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இனக்குழுவினர் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கி சூடு நடைபெறுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story