மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக மேலும் 3 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
மாநிலங்களவையில் இருந்து மேலும் 3 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி,
மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் விவாதம் நடத்த வலியுறுத்தி அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 20 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 7 பேர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், 6 பேர் தி.மு.க.வினர், 3 பேர் தெலுங்கானா ராஷ்டிர சமிதியினர், 2 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள், தலா ஒருவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் ஆவார்கள். இவர்கள் அனைவரும் நேற்று தங்கள் இடைநீக்கத்துக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் மாநிலங்களவை இன்று கூடியதும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பிய எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்ததால் ஆம் ஆத்மி கட்சியின் சுஷீல் குமார் குப்தா உள்ளிட்ட 3 எம்.பி.க்கள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆம் ஆத்மி எம்பி சுஷில் குமார் குப்தா உட்பட மேலும் 3 மாநிலங்களவை எம்பிக்கள் இந்த வாரம் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவதாக மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் கூறியுள்ளார்.
அமளியில் ஈடுபட்டதற்காக சுஷில்குமார் குப்தா, சந்தீப் குமார் பாட்டீல் மற்றும் அஜித் குமார் பொயான் ஆகியோரை இடைநீக்கம் செய்யப்படுவதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 3 பேர் சஸ்பெண்ட் ஆனதால் மாநிலங்களவையில் எம்.பிக்களின் சஸ்பெண்ட் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ளது.