பெலகாவி, யாதகிரி மாவட்டங்களில் அசுத்த நீர் குடித்த 3 பேர் சாவு


பெலகாவி, யாதகிரி மாவட்டங்களில் அசுத்த நீர் குடித்த 3 பேர் சாவு
x
தினத்தந்தி 27 Oct 2022 6:45 PM GMT (Updated: 2022-10-28T00:15:20+05:30)

பெலகாவி, யாதகிரியில் அசுத்த தண்ணீர் குடித்த 3 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் உள்பட 131 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பெலகாவி:

அசுத்த தண்ணீர்

பெலகாவி மாவட்டம் ராமதுர்கா தாலுகாவில் உள்ளது முதேனூர் கிராமம். இந்த கிராமத்தில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் மூலம் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த குடிநீர் தேக்க தொட்டியை கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் சுத்தம் செய்யாமல் இருந்து வந்து உள்ளனர்.

இதனால் வீடுகளுக்கு வரும் தண்ணீர் அசுத்தமாக வந்து உள்ளது. இதுகுறித்து கூறியும் கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அசுத்த தண்ணீரை குடித்ததால் முதேனூர் கிராமத்தில் குழந்தைகள் உள்பட 96 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதாவது வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டனர்.

3 பேர் சாவு

இதையடுத்து 96 பேரும் சிகிச்சைக்காக பாகல்கோட்டை மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முதேனூர் கிராமத்தை சேர்ந்த சரஸ்வதி (வயது 70), சிவப்பா (60) ஆகியோர் உயிரிழந்தனர். 94 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த நிலையில் 2 பேரின் உயிரிழப்புக்கு அதிகாரிகள் அலட்சியம் தான் காரணம் என்றும், இதுவரை கிராமத்திற்கு யாரும் வரவில்லை என்று முதேனூர் கிராம மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையே யாதகிரி மாவட்டம் சகாப்புரா தாலுகா ஹோடபத் என்ற கிராமத்திலும் அசுத்த தண்ணீர் குடித்ததால் ஈரம்மா ஹிரேமத் (95) என்ற மூதாட்டி உயிரிழந்து உள்ளார். குழந்தைகள் உள்பட 37 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு யாதகிரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ராய்ச்சூர் மாவட்டத்தில் அசுத்த நீரை குடித்து 7 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story