மின்சாரம் தாக்கி சிறுமி உள்பட 3 பேர் சாவு


மின்சாரம் தாக்கி சிறுமி உள்பட 3 பேர் சாவு
x

பெலகாவி டவுனில் மின்சாரம் தாக்கி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். அந்த சிறுமியை காப்பாற்ற முயன்ற தாத்தா-பாட்டியும் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.

பெலகாவி:-

மின்சாரம் தாக்கி 3 பேர் பலி

கர்நாடக மாநிலம் பெலகாவி டவுனில் ஷாஹு நகர் 7-வது கிராசில் புதியதாக ஒரு குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் காவலாளியாக எரப்பா கங்கப்பா லமாணி (வயது 50) என்பவர் பணியாற்றி வந்தார். அவர் தனது குடும்பத்துடன் குடியிருப்பின் அருகில் தகர கொட்டகை அமைத்து வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை எரப்பாவின் பேத்தியான 3-ம் வகுப்பு படித்து வரும் அன்னபூர்ணா (8) நேற்று காலை தகர கொட்டையினுள் இருந்த இரும்பு கம்பியை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக கீழே கிடந்த மின்வயரை சிறுமி மிதித்தாள். இதில் அவளை மின்சாரம் தாக்கியது. இதை பார்த்த எரப்பா, கங்கப்பா, லமாணியும், அவரது மனைவி சாந்தவவ்வா (45) காப்பாற்ற முயன்றுள்ளனர். அப்போது அவர்களையும் மின்சாரம் தாக்கியது.

உடலை எடுக்க விடாமல் போராட்டம்

அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மின்சார இணைப்பை துண்டித்தனர். ஆனால் அதற்குள் சிறுமி, தாத்தா, பாட்டி ஆகியோர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெலகாவி ஏ.பி.எம்.சி. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயன்றனர்.

ஆனால் 3 பேரின் குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் திரண்டு வந்து, போதிய பாதுகாப்பு இல்லாமல் தகர கொட்டகையில் தங்க வைத்ததும், இதனால் அவர்கள் மின்சாரம் தாக்கி பலியானதாகவும், எனவே 3 பேரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று 3 பேரின் உடல்களை எடுக்க விடாமல் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மந்திரி உறுதி

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாநில பெண்கள் நலத்துறை மந்திரியும், மாவட்ட பொறுப்பு மந்திரியுமான லட்சுமி ஹெப்பால்கர் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மின்சாரம் தாக்கி பலியான 3 பேரின் குடும்பத்தினருக்கும் அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர். அதன்பிறகு போலீசார், 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெலகாவி ஏ.பி.எம்.சி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story