சங்கிலியில் கட்டியிருந்த நாய் குரைத்ததற்காக இரக்கமின்றி அடித்து, துன்புறுத்திய 3 பேர்
கர்நாடகாவில் சங்கிலியில் கட்டியிருந்த நாயை இரக்கமின்றி அடித்து, துன்புறுத்திய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகாவின் பெங்களூரு கிழக்கு நகரில் மஞ்சுநாதா பகுதியில் வசித்து வருபவர் வீட்டில் செல்ல பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரது வீட்டின் வழியே இரவு நேரத்தில் 3 பேர் நடந்து சென்றுள்ளனர்.
அந்த நேரத்தில், அதுவும் அடையாளம் தெரியாத நபர்களை பார்த்தால் பொதுவாக குரைப்பது நாயின் வழக்கம். இதேபோன்று, அவர்களை நோக்கி நாய் குரைத்து உள்ளது என கூறப்படுகிறது.
ஆனால், தங்களை நோக்கி குரைத்து விட்டது என ஆத்திரமடைந்த அந்த 3 பேரும் சேர்ந்து மரக்கட்டைகளை எடுத்து, சங்கிலியில் கட்டியிருந்த நாயை அடித்து, தாக்கியுள்ளனர். இதில், வலி பொறுக்க முடியாமல் நாய் தரையில் சுருண்டபடி கத்தியுள்ளது.
அவர்களை தடுக்க வந்த நபர் ஒருவர், இந்த காட்சியை வீடியோ எடுத்து உள்ளார். அவரை, 3 பேரும் தள்ளி விட்டுள்ளனர். தொடர்ந்து அவர்கள் நாயை அடித்து உள்ளனர். இதுபற்றி தெரிந்து, நாயின் உரிமையாளர் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்துள்ளார்.
அவரை பார்த்ததும் 3 பேரும் அந்த பகுதியில் இருந்து நடந்து சென்று விட்டனர். இதன்பின்பு, அந்த நாயை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன் நிலைமை என்னவென தெரியவில்லை. போலீசில் அளித்த புகாரின்பேரில் ராகுல், ரோகித் மற்றும் ரஜத் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.