சிக்கமகளூருவில் இருவேறு இடங்களில் நகை, பணம் திருடிய வழக்கில் 3 பேர் கைது


சிக்கமகளூருவில் இருவேறு இடங்களில்  நகை, பணம் திருடிய வழக்கில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 4 Sept 2023 12:15 AM IST (Updated: 4 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூருவில் இருவேறு இடங்களில் நகை, பணம் திருடிய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிக்கமகளூரு:-

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா கூட்லூர் கிராமத்தில் பாக்கு கொள்முதல் செய்வதற்காக பரமேஷ் என்பவர் மினி லாரியில் வந்திருந்தார். அவர் பாக்கு தோட்டத்தின் அருகே லாரியை நிறுத்தியிருந்தார். அப்போது லாரியின் கதவை திறந்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பாக்கு கொள்முதல் செய்வதற்காக வைத்திருந்த ரூ.12 லட்சத்தை திருடி சென்றனர்.

இதுகுறித்து பரமேஷ், பீரூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் திருட்டு வழக்கு தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ரூ.7½ லட்சத்தை பறிமுதல் செய்தனர். கைதான 2 பேர் மீதும் பீரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் சிக்கமகளூரு மாவட்டம் சக்கராயப்பட்டணாவில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் வீட்டை பூட்டிவிட்டு, வெளியே சென்றிருந்தார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த தங்க நகைகளை திருடி சென்றனர். அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் சக்கராயப்பட்டணா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இந்த திருட்டு வழக்கு தொடர்பாக முகமது உமர் என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் முகமது உமர் கொடுத்த தகவலின் பேரில் ரூ.27 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சக்கராயப்பட்டணா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story