ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தாயை சந்திக்க ஆயுள் தண்டனை கைதிக்கு 3 வாரம் பரோல்; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தாயை சந்திக்க ஆயுள் தண்டனை கைதிக்கு 3 வாரம் பரோல்; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x

ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெறும் 75 வயது தாயை சந்திப்பதற்கு, ஆயுள் தண்டனை கைதிக்கு 3 வாரம் பரோல் வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

கொலை வழக்கு

கொப்பல் மாவட்டம் குஷ்டகி தாலுகாவை சேர்ந்தவர் சிவப்பா. இவர் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது நீதிபதி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிவப்பாவின் 75 வயது தாய்க்கு வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

தற்போது அவர் குஷ்டகி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழக்கும் தருவாயில் தனது மகனை சந்திக்க வேண்டும் என அவர் கோரி உள்ளார். இதையடுத்து சிறையில் தண்டனை பெற்று வரும் சிவப்பா, தனக்கு பரோல் வழக்குமாறு சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டிடம் கூறினார். ஆனால் அவருக்கு பரோல் வழங்க போலீஸ் சூப்பிரண்டு மறுத்துவிட்டார்.

ராமாயணத்தில்...

இதையடுத்து சிவப்பா தனக்கு பரோல் வழங்க கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி கிருஷ்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்டார். பின்னர் அவர் கூறுகையில், ராமாயணத்தில் இடம்பெற்ற கருத்தை மேற்கோள் காட்டி தாயும், தாய்மண்ணும் சொர்க்கதைவிட உயர்வானது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், மரணப்படுக்கையில் உள்ள தாய், தனது மகனை பார்க்க விரும்புவதும், இறக்கும் தருவாயில் உள்ள தாயை மகன் இறுதியாக ஒருமுறை பார்ப்பதற்கும் உரிமை உள்ளது. எனவே மனுதாரின் கோரிக்கையை நிராகரிப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்பதால், 75 வயது தாயை இறுதியாக சந்திப்பதற்கு சிவப்பாவிற்கு 3 வாரம் பரோல் வழங்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை சிறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


Next Story