30 ஆண்டுகளாக விசுவாசமுடன் இருந்த என்னை தூக்கி எறிந்து விட்டனர்; பா.ஜ.க. பிரமுகர் கதறல்


30 ஆண்டுகளாக விசுவாசமுடன் இருந்த என்னை தூக்கி எறிந்து விட்டனர்; பா.ஜ.க. பிரமுகர் கதறல்
x

மத்திய பிரதேச பா.ஜ.க.வில் 30 ஆண்டுகளாக விசுவாசமுடன் கட்சியில் இருந்த என்னை தூக்கி எறிந்து விட்டனர் என ராஜ்குமார் சிங் என்பவர் குமுறி அழுதுள்ளார்.



சாகர்,


மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்து துறை மந்திரியாக இருப்பவர் கோவிந்த் சிங் ராஜ்புத். சுர்க்கி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், அவரை பற்றி கட்சியில் இருந்த ராஜ்குமார் சிங் தனோரா என்பவர் ஒழுங்கீனமுடன் பேசியுள்ளார் என குற்றச்சாட்டு எழுந்தது. சமூக ஊடகத்திலும் சில பதிவுகளை அவர் வெளியிட்டு உள்ளார் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, மத்திய பிரதேச பா.ஜ.க. தலைவர் வி.டி. சர்மா உடனடியாக, தனோராவை 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்து உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தனோரா, சாகர் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினார். இந்த ஒழுங்கு மற்றும் விதிமுறைகள் எல்லாம் சிறிய தலைவர்களுக்கு மட்டுமே ஏற்படுத்தப்பட்டு உள்ளதா? என நிருபர்களை பார்த்து கேட்டார்.

மத்திய பிரதேச அரசு, அதிகாரிகளால் நடத்தப்படுகிறது என முன்பு கைலாஷ் விஜயவர்க்கியா கூறினார். முன்னாள் முதல்-மந்திரி உமா பாரதி, மதுபான தடை இயக்கம் பற்றி பேசினார். அவர்கள் மீது ஒழுங்கீனத்திற்காக, கட்சியில் இருந்து நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

ஆனால், சிறிய தொண்டர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது முறையா? இதற்கு மாநில தலைமை பதிலளிக்க வேண்டும் என கூறினார்.

அவர் தொடர்ந்து அழுது கொண்டே கூறும்போது, தவறு ஏதேனும் செய்திருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கோரி கொள்கிறேன். விசுவாசமுடன் கட்சியில் 30 ஆண்டுகளாக செலவிட்டு உள்ளேன். ஆனால் 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து என்னை நீக்கி விட்டனர் என வேதனையுடன் அவர் கூறியுள்ளார். கட்சியில் இருந்து நீக்குவதற்கு அடிப்படையாக இருந்த சமூக ஊடக பதிவை தனோரா நீக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story