பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்ற 38 வியாபாரிகள் கைது


பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்ற 38 வியாபாரிகள் கைது
x

பெங்களூருவில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் போதைப்பொருட்கள் விற்ற 38 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 55 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் பயன்படுத்திய 347 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:

4 நாட்களாக போலீசார் சோதனை

பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்படுத்துவோர் மீது பாரபட்சம் இன்றி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் அருகேயும், மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்கும் நபர்களை பிடிக்கவும் கடந்த 4 நாட்களாக நகர் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு நகரில் உள்ள 8 போலீஸ் மண்டலங்களிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகளுடன் சேர்ந்து, போதைப்பொருட்கள் பயன்படுத்தியோரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் மீது சட்டப்படி வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

38 வியாபாரிகள் கைது

அதன்படி, பெங்களூரு நகர் முழுவதும் கடந்த 4 நாட்களாக நடந்த சோதனையில் ஒட்டு மொத்தமாக போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டதாக 38 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 55 கிலோ கஞ்சா, 215 கிராம் கஞ்சா ஆயில், 768 கிராம் அபீம், 15 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த வியாபாரிகள் மீது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் வழக்கும் பதிவாகி உள்ளது.

அதே நேரத்தில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக 347 பேர் போலீசாரிடம் சிக்கி இருந்தார்கள். அவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story