சாலையோர உணவகத்திற்குள் புகுந்த லாரி - 4 பேர் பலி
உணவக உரிமையாளர் உள்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் இடாவாஹ் மாவட்டம் இஹ்டில் பகுதியில் இடாவாஹ்-கான்பூர் தேசிய நெடுஞ்சாலை அருகே உணவகம் அமைந்துள்ளது.
இந்நிலையில், இந்த உணவகத்தில் நேற்று இரவு 10.30 மணியளவில் வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். உணவகத்தின் உரிமையாளர் குல்தீப் குமாரும் அங்கு இருந்தார்.
அப்போது, இடாவாஹ்-கான்பூர் நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி அதிவேகமாக சாலையோர உணவகத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் உணவக உரிமையாளர் குல்தீப் குமார், வாடிக்கையாளர்கள் 3 பேர் என மொத்தம் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.