உத்தரகாண்டில் பயங்கர நிலச்சரிவு; 4 பேர் பலி - மீட்பு பணிகள் தீவிரம்


உத்தரகாண்டில் பயங்கர நிலச்சரிவு; 4 பேர் பலி - மீட்பு பணிகள் தீவிரம்
x

கோப்புப்படம்

உத்தரகாண்டில் நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவில் சிக்கி 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

டேராடூன்,

உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு போன்ற சேதங்கள் நிகழ்ந்து வருகின்றன.

அந்தவகையில் தேரி மாவட்டத்தின் சம்பா பகுதியில் நேற்று பலத்த நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கிருந்த வாடகை கார் நிறுத்தத்துக்கு அருகே நிகழ்ந்த இந்த நிலச்சரிவால் ஏராளமான கார்கள் மற்றும் வாகனங்கள் மண்ணில் புதைந்தன.

இதில் சில வாகனங்களில் பொதுமக்கள் இருந்ததால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன. அந்தவகையில் ஒரு காரில் இருந்த 2 பெண்கள் மற்றும் 4 மாத குழந்தை ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும் 30 வயது வாலிபர் ஒருவரும் உயிருடன் மண்ணில் புதைந்தார்.

இவர்கள் 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.

சாலை துண்டிப்பு

அங்கு மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே அங்கு தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மாவட்ட கலெக்டர் மயூர் தீட்சித், தலைமை வளர்ச்சி அதிகாரி மணிஷ்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலச்சரிவால் நியூ தேரி-சம்பா சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது.

கனமழை எச்சரிக்கை

இதற்கிடையே மாநிலத்தின் பல பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.

இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.


Next Story