பெங்களூருவில் வாகன திருட்டில் ஈடுபட்ட தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் கைது; ரூ.58 லட்சம் 76 இருசக்கர வாகனங்கள் மீட்பு
பெங்களூருவில் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.58 லட்சம் மதிப்பிலான 76 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் கைது
பெங்களூரு பொம்மனஹள்ளி போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 3 வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவா்கள் தமிழ்நாட்டை சேர்ந்த வல்லரசு, நெடுஞ்செழியன், திருப்பதி என்று தெரிந்தது. இவர்கள் 3 பேரும், தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு பஸ்சில் வருவார்கள். பின்னர் பெங்களூருவில் வீடு மற்றும் வாகனம் நிறுத்தும் பகுதியில் நிறுத்தப்பட்டு இருக்கும் இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்வதை 3 பேரும் தொழிலாக வைத்திருந்தது தெரியவந்தது.
கைதான 3 பேரும் கொடுத்த தகவலின் பேரில் பெங்களூருவில் பல்வேறு பகுதிகளில் திருடிய 26 இருசக்கர வாகனங்களை போலீசார் மீட்டு இருந்தார்கள். அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
ரூ.58 லட்சம் மதிப்பு
இதுபோல், மைகோ லே-அவுட் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது சந்தேகப்படும் படியாக சுற்றிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவரது பெயர் சையத் சுகேல் என்று தெரிந்தது. இவர், சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு ஆசைப்பட்டு பெங்களூரு மற்றும் பிற பகுதிகளில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடி விற்றது தெரிந்தது. இதையடுத்து, சையத் சுகேல் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் ரூ.38 லட்சம் மதிப்பிலான 50 இருசக்கர வாககனங்களை போலீசார் மீட்டு இருந்தார்கள்.
ஒட்டு மொத்தமாக வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.58 லட்சம் மதிப்பிலான 76 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டு இருந்தது. மீட்கப்பட்ட இருசக்கர வாகனங்களை நேற்று துணை போலீஸ் கமிஷனர் சி.கே.பாபா பார்வையிட்டார்.