மும்பை: பிறந்தநாள் கொண்டாட சென்ற 4 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி
அம்பர்நாத் கோண்டதேவ் சிவன் கோவிலில் பிறந்தநாள் கொண்டாட சென்ற 4 மாணவர்கள் நீரில் மூழ்கி பலியாகினர்.
மும்பை:
மும்பை காட்கோபர் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த மாணவர் ஆகாஷ் (வயது 19). வணிக கல்வி பயின்று வருகிறார். இன்று இவருக்கு பிறந்தநாள் என்பதால், இதனை கொண்டாட தானே மாவட்டம் அம்பர்நாத்தில் உள்ள கோண்டதேவ் சிவன் கோவிலுக்கு பாபா மஞ்ரேக்கர் (18), சூரஜ் சால்வே (19), லினஸ் பாஸ்கர் (19) ஆகியோர் நண்பர்களுடன் சென்றார்.
இந்நிலையில் மதியம் 1.30 மணி அளவில் அங்கிருந்த நீர்தேக்கத்தில் இருந்த தண்ணீரில் குளிக்க உள்ளே இறங்கினர். ஆழம் அதிகமாக இருந்ததால் 4 பேரும் தண்ணீரில் ஒன்றன்பின் ஒன்றாக மூழ்கினர். இதனை கண்ட மற்ற நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர்.
ஆழம் அதிகம் இருந்ததால் உடனே தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் படகு மூலம் தண்ணீரில் மூழ்கிய 4 பேரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
உடனே அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் 4 பேரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து அம்பர்நாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிறந்தநாள் கொண்டாட சென்ற மாணவர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பலத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.