4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சப்-இன்ஸ்பெக்டர்; அதிர்ச்சி சம்பவம்


4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சப்-இன்ஸ்பெக்டர்; அதிர்ச்சி சம்பவம்
x

போலீஸ் நிலையம் முன் திரண்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டம் ராகுவாஸ் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக செயல்பட்டு வருபவர் பூபேந்திரசிங். அம்மாநிலத்தில் வரும் 25ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் பூபேந்திரசிங் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் பூபேந்திரசிங் அப்பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியை கடத்தி சென்று தனது அறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் சப்-இன்ஸ்பெக்டர் பூபேந்திரசிங்கை கடுமையாக தாக்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர், போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சப்-இன்ஸ்பெக்டர் பூபேந்திரசிங்கை கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் வரும் 25ம் தேதி அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story