உத்தரபிரதேசத்தில் 5 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
உத்தரபிரதேசத்தில் இருவேறு சம்பவங்களில் 5 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் கபீர்நகர் மாவட்டத்தில் உள்ளது பார்கோ கிராமம். ஊரை ஒட்டி பாகிரா ஏரி உள்ளது. ஏரியில் படகில் சென்று சிலர் மீன்பிடிப்பது உண்டு. நேற்று ஒரு படகில் சிறுமிகள் மீனாட்சி (வயது 17), காஜல்(16), அர்ச்சனா (15), பாயல் (13) உள்ளிட்டவர்கள் சென்றுள்ளனர். எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்ததில் இவர்கள் 4 பேரும் ஏரியில் மூழ்கினர். அவர்களில் காஜல் தவிர மற்ற 3 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். காஜல் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார்.
இதேபோல இந்த மாவட்டத்தின் துத்ரா போலீஸ் நிலைய எல்லை பகுதியில் மற்றொரு சம்பவம் நடந்தது. கத்தியவா கிராமத்தை சேர்ந்த சகோதரிகளான பிரமிளா(18), ஊர்மிளா(15) இருவரும் ஊரை ஒட்டி உள்ள தோட்டத்திற்கு சென்றனர். அப்போது அருகில் உள்ள குட்டையில் ஊர்மிளா தவறி விழுந்தார். அவரை காப்பாற்ற பிரமிளாவும் குட்டையில் குதித்து உள்ளார். இதில் இருவரும் நீரில் மூழ்கி பலியானார்கள்.
மீட்பு படையினர் அவர்களது உடல்களை கைப்பற்றி குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவங்கள் குறித்து அந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.