பீகாரில் மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழப்பு; 18 மாணவர்கள் படுகாயம்
பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
பாட்னா,
பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள பத்னாகா கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த நபர்கள் மீது மின்னல் தாக்கியது. இந்த சம்பவத்தில் 2 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த மற்றொரு நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதே போல் மற்றொரு சம்பவத்தில் துமாரியா கிராமத்தில் 2 பெண்கள் மீது மின்னல் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே போஜ்பூர் மாவட்டம் பர்கா கோன் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியைச் சேர்ந்த 18 மாணவர்கள் மின்னல் தாக்கி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மாணவர்கள் ஆரா நகரில் உள்ள சர்தார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.