வாலிபருடன் காரை அபாயகரமாக ஓட்டிய விவகாரத்தில் பெண் உள்பட 5 பேர் கைது
பெங்களூருவில் வாலிபருடன் காரை அபாயகரமாக ஓட்டிய விவகாரத்தில் பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
பெங்களூரு மரியப்பன பாளையாவை சேர்ந்தவர் தர்ஷன் (வயது 31). ஓட்டல் உரிமையாளரான இவர், நேற்று முன்தினம் உல்லால் மெயின் ரோட்டில் வைத்து காருக்கு வழிவிடாத பிரச்சினையில் பிரியங்கா என்ற பெண்ணுடன் தகராறு செய்தார். தர்ஷன் மீது காரை பிரியங்கா ஏற்ற முயன்றதால், முன்பகுதியில் உள்ள என்ஜின் மீது தர்ஷன் படுத்து கொண்டார். ஆனாலும் காரை நிறுத்தாமல் என்ஜின் மீது படுத்திருந்த தர்ஷனுடன் 3 கிலோ மீட்டர் தூரம் பிரியங்கா அபாயகரமாக காரை ஓட்டி சென்றிருந்தார். இதனால் பிரியங்காவின் காரை தர்ஷன், அவரது நண்பர்கள் உடைத்திருந்தார்கள். பிரியங்காவையும் தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, பிரியங்கா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ஞானபாரதி போலீசார் கைது செய்திருந்தனர். பிரியங்காவை தகாத வார்த்தையில் திட்டியதுடன், காரை உடைத்ததாக தர்ஷன், வினய், சுஜன், யஷ்வந்த் ஆகிய 4 பேர் மீதும் ஞானபாரதி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருந்தார்கள். கைதான 5 பேரிடமும் விசாரணை நடத்திவிட்டு, அவர்களை நேற்று காலையில் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அப்போது பிரியங்கா உள்பட 5 பேரையும் வருகிற 3-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, 5 பேரையும் போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.