துர்கா சிலையை மழைநீர் தேங்கிய குழியில் கரைக்க சென்ற 5 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தானில் துர்கா சிலையை மழைநீர் தேங்கிய குழியில் கரைக்க சென்று நீரில் மூழ்கி 5 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் நந்துலா கிராமத்தில் நசீராபாத் சதர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக துர்கா பூஜையில் சிலர் ஈடுபட்டு உள்ளனர்.
இதன்பின்னர் துர்கா சிலையை நீரில் கரைப்பதற்காக சென்றுள்ளனர். அவர்கள் சிலையை எடுத்து சென்று, அந்த பகுதியில் மழை பெய்து நீர் நிரம்பிய பகுதியில் கரைத்து விடலாம் என சென்றுள்ளனர். அந்த குழியில் ஆழம் குறைவாக இருக்கும் என நினைத்தபடி நீரில் அவர்கள் 5 பேரும் இறங்கியுள்ளனர்.
ஆனால், அந்த குழி பல அடி ஆழத்தில் இருந்துள்ளது. இதில் அவர்கள் அனைவரும் நீருக்குள் மூழ்கி உயிரிழந்தனர். அவர்கள் பவன் ராய்கர் (வயது 35), கஜேந்திரா ராய்கர் (வயது 38), ராகுல் மேக்வால் (வயது 24), லக்கி பைரவா (வயது 21) மற்றும் ராகுல் ராய்கர் (வயது 20) என அடையாளம் காணப்பட்டு உள்ளது.
அவர்கள் உடலை மீட்டு போலீசார் அருகேயுள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.