கேரளாவில் 5 வயது சிறுமி கடத்தி கொலை; அசாம் வாலிபர் கைது


கேரளாவில் 5 வயது சிறுமி கடத்தி கொலை; அசாம் வாலிபர் கைது
x

ஆலுவாவில் 5 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்டாள். இதுதொடர்பாக அசாம் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சிறுமி கடத்தல்

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்தர் திவாரி. தொழிலாளி. இவர் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே முட்டம் பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி நீது குமாரி. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இதில் 2-வது குழந்தை சாந்தினி (வயது 5). இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சிறுமி சாந்தினி திடீரென காணாமல் போனாள். தொடர்ந்து அவளை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால், எங்கும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து பெற்றோர் ஆலுவா போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் அதே பகுதியில் வசிக்கும் அசாம் மாநிலத்தை சேர்ந்த அஸ்பாக் ஆலம் (வயது 28) என்பவர் சாந்தினிக்கு கடையில் ஜூஸ் வாங்கி கொடுத்து விட்டு, அங்கிருந்து அழைத்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது. விசாரணையில் அவர் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது.

பிணம் மீட்பு

இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மதுபோதையில் இருந்த அஸ்பாக் ஆலத்தை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் சிறுமியை தனது கூட்டாளியான சகீர் என்பவரிடம் ஒப்படைத்தது தெரியவந்தது. தொடர்ந்து அஸ்பாக் ஆலத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் சகீரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று ஆலுவா சந்தை பகுதியில் சாக்கு மூட்டை கேட்பாரற்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூட்டையை பிரித்து பார்த்த போது, ஒரு சிறுமி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது தெரியவந்தது. பின்னர் கடத்தப்பட்ட சாந்தினியின் பெற்றோரை போலீசார் வரவழைத்தனர். அவர்கள் அந்த உடலை பார்த்து, காணாமல் போன தங்களது மகள் சாந்தினி தான் என அடையாளம் காட்டினர்.

போலீசார் விசாரணை

சிறுமி எதற்காக கடத்தி கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து அஸ்பாக் ஆலத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சகீரை பிடித்தால் தான், சிறுமி எதற்காக கடத்தப்பட்டார்?, கொலைக்கான காரணம் என்ன? போன்ற விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story