இந்தியாவில் மேலும் 514 பேருக்கு கொரோனா தொற்று: 3 பேர் பலி


இந்தியாவில் மேலும் 514 பேருக்கு கொரோனா தொற்று: 3 பேர் பலி
x
தினத்தந்தி 11 Jan 2024 10:14 AM GMT (Updated: 12 Jan 2024 6:15 AM GMT)

புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,422 ஆக அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனாவின் புதிய வகையான 'ஜேஎன்.1' வகை தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த வகை கொரோனா வேகமாகப் பரவுவதோடு, நோய்த் தடுப்பாற்றலையும் ஊடுருவுமென கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக ஜே.என்.1 வகை உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ ஆரம்பித்தது.

கடந்த மாதம் டிசம்பர் 5-ம் தேதி வரை இரண்டு இலக்கங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்தது. ஆனால் குளிர் காலம் ஆரம்பித்த பின்னர் பாதிப்பு அதிகமாக தொடங்கியது. கடந்த டிசம்பர் 31-ம் தேதி அன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 841 பேர் பாதிக்கப்பட்டனர். இது கடந்த 2021-ம் ஆண்டு மே மாதத்தில் பதிவான அளவில் 0.2 சதவீதம் ஆகும்.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 514 பேருக்கு புதிய வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,422 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி மராட்டியத்தில் 2 பேரும், கர்நாடகாவில் ஒருவரும் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

ஜேஎன்.1 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 92 சதவீதம் பேர் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று குணமாகி விடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story