சபரிமலையில் இதுவரை 6 லட்சம் பக்தர்கள் தரிசனம்: 10 நாட்களில் ரூ.52½ கோடி வருவாய்


சபரிமலையில் இதுவரை 6 லட்சம் பக்தர்கள் தரிசனம்: 10 நாட்களில் ரூ.52½ கோடி வருவாய்
x

சபரிமலையில் இதுவரை 6 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

சபரிமலையில் இதுவரை 6 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதன்மூலம் 10 நாட்களில் கோவிலுக்கு ரூ.52½ கோடி வருவாய் கிடைத்தது. அதில் அப்பம்-அரவணை விற்பனை மூலம் மட்டும் ரூ.26 கோடி கிடைத்துள்ளது.

8¾ லட்சம் பேர் முன்பதிவு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந்தேதி முதல் வழக்கமான பூஜைகள், வழிபாடுகள் நடந்து வருகிறது. பக்தர்களும் தரிசனம் செய்து வருகின்றனர்.

கடந்த 17-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை 11 நாட்களில் 6 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்து உள்ளனர்.

மேலும், சபரிமலையில் வருகிற 30-ந்தேதி வரை சாமி தரிசனத்துக்காக 8 லட்சத்து 79 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரூ.52½ கோடி வருமானம்

சபரிமலை நடை திறக்கப்பட்டு கடந்த 11 நாட்களில் 6 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதன் மூலம் கடந்த 10 நாட்களில் ரூ.52.55 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இதில் பிரசாதங்களான அரவணை மூலம் ரூ.23.57 கோடியும், அப்பம் விற்பனை மூலம் ரூ.2.58 கோடியும், காணிக்கையாக ரூ.12.73 கோடியும், தங்கும் அறைகள் வாடகை மூலம் ரூ.48.84 லட்சமும், அபிஷேகம் மூலம் ரூ.31.87 லட்சமும் கிடைத்துள்ளது.

வருமானத்தில் முக்கால் பாகம் நடப்பு சீசன் செலவினங்களுக்கு செலவிடப்படுகிறது.

3 இடங்களில் அன்னதானம்

சபரிமலையில் தினசரி 2.5 லட்சம் டின் அரவணை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது 51 லட்சம் டின் அரவணை இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. மண்டல காலம் தொடங்கியதில் இருந்தே அய்யப்ப பக்தர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாத வகையில் தரிசனத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

ஆன்லைன் மற்றும் உடனடி பதிவு திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது. சன்னிதானம் செல்லும் அனைத்து பாதைகளும் திறக்கப்பட்டுள்ளன. இதில் ஏதேனும் ஒரு வழியை அய்யப்ப பக்தர்கள் தேர்வு செய்யலாம். அய்யப்ப பக்தர்கள் மலை ஏறும் முக்கிய வழித்தடத்தில் பராமரிப்பு பணி செவ்வாய்க்கிழமை (இன்று) தொடங்கி ஒரு வாரத்தில் நிறைவடையும்.

மேலும், சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் தடையின்றி மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்படுகிறது என்று அவர் கூறினார்.


Next Story