அரசு திட்ட நிதி ஒதுக்கீடு ரூ.60 கோடி; திட்ட விளம்பர செலவு ரூ.52.52 கோடி... அதிர வைக்கும் டெல்லி நிலவரம்


அரசு திட்ட நிதி ஒதுக்கீடு ரூ.60 கோடி; திட்ட விளம்பர செலவு ரூ.52.52 கோடி... அதிர வைக்கும் டெல்லி நிலவரம்
x
தினத்தந்தி 3 Dec 2022 11:03 AM GMT (Updated: 3 Dec 2022 11:48 AM GMT)

டெல்லியில் அரசு திட்டத்திற்கு ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து விட்டு, திட்ட விளம்பரத்திற்கு ரூ.52.52 கோடி செலவிடப்பட்டு உள்ளது என அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.


புதுடெல்லி,


டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி அரசில், முதல்-மந்திரி கெஜ்ரிவால் பல்வேறு நல திட்டங்களை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முனைப்பில் செயல்பட்டு வருகிறார்.

ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில் கல்வி, சுகாதார விசயங்களில் ஆம் ஆத்மி அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதன்படி, கோடிக்கணக்கிலான மாணவர்கள் இலவச கல்வியை பெறும் திட்டம் ஊக்குவிக்கப்படுகிறது.

நாட்டில் முன்மாதிரியாக உள்ள இந்த செயல் திட்டம் பிற மாநில அரசுகளாலும் பின்பற்றப்பட வேண்டும் என கெஜ்ரிவால் அரசு வலியுறுத்தி வருகிறது.

இதுதவிர, ஏழை மக்கள் இலவச சுகாதார நல வசதிகளை பெறும் வகையில், மொகல்லா கிளினிக்குகள் என்ற பெயரில் சுகாதார மையங்கள் பல இடங்களில் விரிவுபடுத்தப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.

இந்த நல திட்டங்களின் ஒரு பகுதியாக, படிக்கும்போதே பள்ளி மாணவர்களை தொழில்முனைவோர் ஆக்கும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த கெஜ்ரிவால் தலைமையிலான அரசு முடிவு செய்தது.

இதன்படி, 9 முதல் 12 வரையிலான வகுப்பு படிக்கும் மாணவர்களை தொழில்முனைவோர் ஆக்கும் திட்டம் செயல்படுத்த முடிவாகி, இதற்காக 2021-2022-ம் ஆண்டுக்காக ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, இந்த நிதி எந்த வகையில் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பது பற்றி உள்மட்ட அறிக்கை ஒன்று தயாரானது. அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மொத்தம் ரூ.60 கோடி நிதி ஒதுக்கீட்டில் ரூ.56.14 கோடி அளவுக்கே நிதி விடுவிக்கப்பட்டு உள்ளது. ஏதேனும் தொழில் தொடங்கும் வகையிலான எண்ணத்துடன், ஒரு மாணவருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் நிதியொதுக்க அனுமதி அளிக்கப்பட்டது.

எனினும், பல பள்ளி கூடங்கள் இந்த நிதியை திருப்பி அளித்துள்ளன. இந்த ரூ.56.14 கோடி தொகையில் திருப்பி வந்த தொகையின் மதிப்பு ரூ.26 கோடி என கூறப்படுகிறது.

இதில், அதிர்ச்சிகர விசயம் என்னவென்றால், இந்த திட்ட விளம்பரத்திற்காக மட்டுமே ரூ.52.52 கோடி அளவுக்கு நிதி செலவிடப்பட்டு உள்ளது என டெல்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


Next Story