பிறக்கும்போதே குழந்தை இறந்தாலும் பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு விடுப்பு


பிறக்கும்போதே குழந்தை இறந்தாலும் பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு விடுப்பு
x

கோப்புப்படம்

குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டால் பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசு ஊழியர்களுக்கான விடுப்பு விதிமுறைகள் தொடர்பான சந்தேகங்களுக்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்து வருகிறது. அந்தவகையில் குழந்தை பிறந்தவுடனே இறக்கும் நிகழ்வுகளில் பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு பிரசவ கால விடுப்பு அனுமதிக்கப்படும் என கூறியுள்ளது.

இது தொடர்பாக அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தாயின் வாழ்க்கையில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வான, குழந்தை பிறந்த உடனேயே இறப்பது அல்லது இறந்தே பிறப்பதால் ஏற்படக்கூடிய உணர்ச்சிகரமான அதிர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

அந்த பெண் ஊழியர் ஏற்கனவே பிரசவ கால விடுப்பில் இருந்தாலும், அந்த விடுப்பை வேறு விடுப்பாக மாற்றிக்கொண்டு, குழந்தை இறந்த நாளில் இருந்து 60 நாட்கள் கூடுதலாக சிறப்பு விடுப்பு வழங்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது. பிரசவம் ஆனதில் இருந்து 28 நாட்களுக்குள் குழந்தை இறந்தால் மட்டுமே இந்த சிறப்பு விடுப்பு பெற தகுதி உண்டு என்றும் அரசு தெரிவித்து உள்ளது.


Next Story