குஜராத்: மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் பலி- அமைச்சர் தகவல்


குஜராத்: மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் பலி- அமைச்சர் தகவல்
x

குஜராத்தில் மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா தெரிவித்துள்ளார்

ஆமதாபாத்,

குஜராத்தின் மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கேபிள் பாலம் ஒன்று அமைந்து உள்ளது. இதனை புதுப்பிக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன.

இதன்பின்னர், கடந்த 26-ந்தேதி மீண்டும் பாலம் திறக்கப்பட்டு பொது பயன்பாட்டுக்கு வந்தது. குஜராத்தி மக்களுக்கான புது வருட தொடக்கத்துடன் இணைந்து பாலம் திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது.

இந்த நிலையில், பாலத்தில் இன்று 500-க்கும் மேற்பட்டோர் இருந்தபோது, திடீரென பாலம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்து உள்ளனர். பலரது நிலைமை என்னவென்று தெரியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்ததும், பிரதமர் மோடி மீட்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார்.

உள்ளூர்வாசிகளும் உதவிக்கு ஓடி வந்தனர். 100 பேர் வரை இன்னும் பால இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் என்றும், அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் இதுவரை 35 பேர் பலியாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்று அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "60க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டன, அதில் அதிகமான குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்ளனர். மீதமுள்ளவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். தற்போது 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாலை 6.40 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. தேசிய பேரிடர் பாதுகாப்பு படைவீரர்கள் மூலம் மீட்பு பணி நடந்து வருகிறது. இந்த விஷயத்தை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், இது மிகவும் வருத்தமளிக்கிறது.

தற்போது அங்குள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்கான இயந்திரங்கள் அந்த இடத்தில் உள்ளன, இதனால் நாம் மற்றவர்களை கண்டுபிடிக்க முடியும். நிறைய வண்டல் மண் இருப்பதால், அடியில் இறக்கிறது. பாலத்தில் அதிக சுமை ஏற்றப்பட்டதால் இந்த சம்பவத்திற்கு வழிவகுத்தது. மீட்புப் பணியில் பல குழுக்கள் ஈடுபட்டுள்ளன, சம்பவ இடத்திற்கு முதல்-மந்திரி விரைவில் வருவார்" என்று அவர் கூறினார்.

இதனிடையே இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ .2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story