கடல் அரிப்பால் 66 வீடுகள் சேதம்; தொடர் கனமழையால் ரூ.5 கோடிக்கு பாதிப்பு


கடல் அரிப்பால் 66 வீடுகள் சேதம்; தொடர் கனமழையால் ரூ.5 கோடிக்கு பாதிப்பு
x

மங்களூருவில் கடல் அரிப்பால் 66 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் ரூ.5 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

மங்களூரு;

தென்மேற்கு பருவமழை

கர்நாடகத்தில் கடலோர மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக ெபய்து வருகிறது. கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் பலத்த மழை கொட்டி வருகிறது. மேலும், அரபிக்கடலிலும் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.

இந்த நிலையில் அரபிக்கடலில் அலையின் சீற்றம் அதிகமாக உள்ளதால் தட்சிண கன்னடா மாவட்டத்தில் மங்களூரு அருகே உல்லால் பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.

66 வீடுகள் சேதம்

இந்த கடல் அரிப்பால் கடந்த 3 நாட்களில் உல்லால், உச்சிலா, பட்டப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் 66 வீடுகள் சேதமடைந்து உள்ளன. உச்சிலாவில் 30 வீடுகளும், பட்டப்பாடியில் 15 வீடுகளும், உல்லாலில் 15 வீடுகளும் மிகவும் அபாயகரமான கட்டத்தில் உள்ளன. இதனால் அங்கு வசித்து வந்த மக்கள் வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், உச்சிலா, பட்டப்பாடி, உல்லால் பகுதியில் கடல் அரிப்ைப தடுக்க மாவட்ட நிர்வாகமோ, மாநில அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்தப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

மேலும், கடல் அரிப்பை தடுக்க அமைக்கப்பட்ட சுவரும் இடிந்து விழுந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அதனையும் சரி செய்யவில்லை என மக்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர். இதனால் தங்களுக்கு வேறு இடத்தில் வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரூ.5 கோடிக்கு சேதம்

இந்த நிலையில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொட்டி வரும் தொடர் கனமழைக்கு ரூ.5 கோடி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் மதிப்பிட்டுள்ளது. பைக்கம்பாடி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் புகுந்த நீரால் எந்திரங்கள் சேதமடைந்துள்ளன.

மங்களூரு நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான வீடுகள் கனமழைக்கு சேதம் அடைந்துள்ளது. மாவட்டத்தில் 11 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளது. மேலும் 77 வீடுகள் சேதமடைந்து உள்ளது. மங்களூரு நகர எல்லையில் 7 வீடுகள் முழுமையாக இடிந்து உள்ளதுடன் 42 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளது.

மேலும் 38 மின்கம்பங்கள், 3 டிரான்ஸ்பார்மர்களும் சேதமடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்து விழுந்து மின் வயர்களும் அறுந்து நாசமாகி உள்ளது.

2 மடங்கு அதிக மழை

கடந்த 30-ந்தேதி தட்சிண கன்னடா மாவட்டத்தில் வழக்கத்தை விட 2 மடங்கு அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் மாவட்டத்தில் மொத்தம் 85.1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மங்களூரு மற்றும் பண்ட்வால் பகுதிகளில் அதிகபட்சமாக 108.9 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

இதனால் அந்தப்பகுதிகளில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story