டெல்லி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து 7 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்


டெல்லி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து 7 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்
x

Image Courtesy : PTI

துணை நிலை கவர்னரின் உரையில் இடம்பெற்ற ஆம் ஆத்மி அரசின் சாதனைகளுக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

புதுடெல்லி,

டெல்லி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா, சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தியபோது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். கவர்னரின் உரையில் ஆம் ஆத்மி அரசின் சாதனைகள் குறித்து வாசிக்கப்பட்டபோது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.

இதனால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை அமைதியாக இருக்குமாறு சட்டமன்ற சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் வலியுறுத்தினார். ஆனால் அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், துணை நிலை கவர்னரின் உரைக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி 7 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை அவையில் இருந்து வெளியேற்ற பாதுகாவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. திலிப் பாண்டே இன்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது பேசிய அவர், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் திட்டமிட்டு துணை நிலை கவர்னரின் உரைக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், அவையின் மாண்பை குறைக்கும் வகையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மோகன் சிங் பிஷ்ட், அஜய் மஹாவார், ஓ.பி.சர்மா, அபய் வர்மா, அனில் வாஜ்பாய், ஜிதேந்தர் மஹாஜன் மற்றும் விஜேந்தர் குப்தா ஆகிய 7 பேரை சபையில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டார். மேலும் அவர்களை மீதம் உள்ள பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

இந்த விவகாரத்தை சட்டமன்ற சிறப்புரிமைக் குழுவிற்கு அனுப்பி வைப்பதாக சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் தெரிவித்தார். இடைநீக்கம் செய்யப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி தலைவர் ராம்வீர் சிங் பிதுரியும் வெளிநடப்பு செய்தார்.


Next Story