உத்தரபிரதேசம்: மின்னல் தாக்கி 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு


உத்தரபிரதேசம்: மின்னல் தாக்கி 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு
x

கோப்புப்படம்

உத்தரபிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் புடான், எட்டா மற்றும் ரேபரேலி மாவட்டங்களில் நேற்று மின்னல் தாக்கியதில் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

முன்னதாக விவசாயிகளான பப்லு (30) மற்றும் வர்ஜீத் யாதவ் (32) இருவரும் உஷைத் பஜாரில் இருந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் உஷைத் நகரில் நடந்த மற்றொரு சம்பவத்தில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய 11 வயது சிறுமி அன்ஷிகா மின்னல் தாக்கி உயிரிழந்தாள்.

மூன்று பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று டேடாகஞ்ச் சப் டிவிஷன் மாஜிஸ்திரேட் தர்மேந்திர குமார் சிங் கூறினார்.

ரேபரேலி மாவட்டத்தில் திஹ், படோகர் மற்றும் மில் பகுதி காவல் நிலையப் பகுதிகளில் மின்னல் தாக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திஹ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெண்டலால் கிராமத்திற்கு அருகில் உள்ள வயல்வெளியில் மோஹித் பால் (14) என்ற சிறுவன் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தான். அப்போது, மின்னல் தாக்கியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

மில் பகுதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூர்வா கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஜமுனா பிரசாத் (38) என்பவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார். அதேபோல் சராய் டாமோ கிராமத்தில் படோகர் காவல் நிலையப் பகுதியில் ராமகாந்தி (38) என்பவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார். எட்டா மாவட்டத்தின் கஞ்சர்பூர் கிராமத்தில், தர்மேந்திரா (32) என்பவர் தனது கால்நடைகளுக்கு தீவனம் எடுப்பதற்காக பலத்த மழைக்கு மத்தியில் வெளியே வந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்தார்.


Next Story