குண்டுவெடிப்பு குற்றவாளி ஆன்லைனில் சட்டத் தேர்வை எழுத முடியுமா? மும்பை பல்கலைக்கழகத்திற்கு ஐகோர்ட்டு கேள்வி


குண்டுவெடிப்பு குற்றவாளி ஆன்லைனில் சட்டத் தேர்வை எழுத முடியுமா? மும்பை பல்கலைக்கழகத்திற்கு ஐகோர்ட்டு கேள்வி
x

ரெயில் குண்டுவெடிப்பு குற்றவாளியை சரியான நேரத்தில் கல்லூரிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை என அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

மும்பை:

மும்பையில் கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி புறநகர் ரெயில்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 189 பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதல் தொடர்பான வழக்கில் முகமது சாஜித் மர்கூப் அன்சாரி உள்ளிட்ட சிலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. நாசிக் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் அன்சாரி, மும்பை ஐகோர்ட்டு அனுமதியுடன் சட்டப்படிப்பு படித்து வருகிறான்.

இந்நிலையில், கடந்த 3-ம் தேதி இரண்டாவது செமஸ்டர் தேர்வு தொடங்கிய நிலையில், தேர்வு எழுதுவதற்காக அன்சாரியை சிறைத்துறை நிர்வாகம் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்திற்கு அழைத்து வரவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், 3-ம் தேதி மற்றும் 9-ம் தேதியில் நடந்த தேர்வின்போது அன்சாரியை கல்லூரிக்கு அழைத்து வருவதற்கு தாமதம் ஆனதால் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

இதுதொடர்பாக அன்சாரி தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். நாசிக் மத்திய சிறைச்சாலை அதிகாரிகள் முயற்சி செய்தும் அன்சாரியை சரியான நேரத்தில் கல்லூரிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை என தெரிவித்தார். இதையடுத்து தாமதத்திற்காக காரணம் குறித்து விரிவான விளக்கங்களுடன் ஜூன் 5-ம் தேதி பதில் மனு தாக்கல் செய்யும்படி சிறை கண்காணிப்பாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதேசமயம், ஆன்லைனில் தேர்வு எழுதுவதற்கு அன்சாரியை அனுமதிக்க முடியுமா? என்று மும்பை பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேட்டனர். பல்கலைக்கழகத்தில் அத்தகைய வசதி இல்லை என வழக்கறிஞர் கூறினார்.

இதையடுத்து, மும்பை பல்கலைக்கழகத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விஷயம் குறித்து ஆய்வு செய்து, மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்புகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி, தனது நிலைப்பாட்டை பதிவு செய்யவேண்டும் என நீதிபதிகள் கூறினர். அன்சாரி தவறவிட்ட இரண்டு தேர்வுகளை அவருக்கு வேறு தேதிகளில் நடத்த முடியுமா? எனவும் கேள்வி எழுப்பினர்,

"சில வழக்குகளில் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, மாணவரை ஆன்லைன் முறையில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இதுபோன்ற மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடத்த முடியுமா? என்பது குறித்து பல்கலைக்கழகம் விளக்கம் அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story