இந்தியாவில் பால் உற்பத்தி துறையில் 8 கோடி குடும்பங்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளன - பிரதமர் மோடி
கால்நடைகளுக்கு பரவி வரும் லம்பி வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த உள்நாட்டில் தடுப்பூசி தயாரித்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நொய்டா,
கால்நடைகளுக்கு பரவி வரும் லம்பி வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த உள்நாட்டில் தடுப்பூசி தயாரித்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நொய்டாவில் இந்திய எக்ஸ்போ மையத்தால் நடத்தப்படும் சர்வதேச பால்வள கூட்டமைப்பு உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
4 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், 50 நாடுகளை சேர்ந்த தொழில்துறை வல்லுநர்கள், விவசாயிகள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் பால் உற்பத்தி துறையில் 8 கோடி குடும்பங்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளதாகவும், பால் கூட்டுறவு சங்கங்களுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் 2 கோடி விவசாயிகளிடம் இருந்து பால் சேகரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
பால் கூட்டுறவு சங்கங்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இருப்பதாகவும், பால் உற்பத்தி துறையில் 70 சதவீத தொழிலாளர்களை பெண் சக்தி ஆட்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், கால்நடைகளுக்கு லம்பி நோய் பாதிப்பு ஏற்படுவதால், மாநில அரசுகளுடன் இணைந்து உள்ளூர் தடுப்பூசி தயாரித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், 2025-ம் ஆண்டுக்குள் கால்நடைகளுக்கு நூறு சதவீதம் புருசெல்லா தடுப்பூசி போடப்படும் என்றும் தெரிவித்தார்.