80 சதவீத இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவு..!! பன்னாட்டு கருத்து கணிப்பில் தகவல்


80 சதவீத இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவு..!! பன்னாட்டு கருத்து கணிப்பில் தகவல்
x

Image Courtacy: PTI

தினத்தந்தி 31 Aug 2023 5:33 AM GMT (Updated: 31 Aug 2023 7:45 AM GMT)

80 சதவீத இந்தியர்கள், பிரதமர் மோடிக்கு ஆதரவான கருத்து கொண்டிருப்பதாக 24 நாடுகளில் நடந்த கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவை சேர்ந்த 'பியு ரிசர்ச் சென்டர்' என்ற அமைப்பு ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. இந்தியா உள்பட 24 நாடுகளில் 30 ஆயிரத்து 861 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 20-ந் தேதி முதல் மே 22-ந் தேதி வரை கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

பிரதமர் மோடி பற்றிய உளகளாவிய பார்வை, இந்தியா உலக வல்லரசு ஆவதற்கான வாய்ப்பு, இதர நாடுகளை பற்றிய இந்தியர்களின் கருத்துகள் ஆகியவை கருத்து கணிப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

80 சதவீதம் பேர் ஆதரவு

அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் கூறப்பட்டு இருப்பதாவது:-

80 சதவீத இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவான கருத்து கொண்டுள்ளனர். அவர்களில் 55 சதவீத இந்தியர்கள் பிரதமர் மோடியை தீவிரமாக ஆதரிக்கும் கருத்து கொண்டுள்ளனர்.

20 சதவீத இந்தியர்கள் மட்டுமே மோடிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

இந்தியாவை பற்றிய உலக மக்களின் கருத்து சாதகமாகவே உள்ளது. 46 சதவீதம் பேர் இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். 34 சதவீதம் பேர் எதிராக கருத்து தெரிவித்தனர். 16 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.

இஸ்ரேல் நாட்டில்தான் இந்தியாவுக்கு மிகவும் ஆதரவான நிலைப்பாடு காணப்பட்டது. அங்கு 71 சதவீத மக்கள் இந்தியாவுக்கு ஆதரவான கருத்து கொண்டுள்ளனர்.

செல்வாக்கு அதிகரிப்பு

இந்தியாவின் வலிமை அதிகரித்து வருவதாக இந்தியர்கள் கருதுகிறார்கள். 10 இந்தியர்களில் 7 பேர், தங்கள் நாடு சமீபகாலமாக மிகுந்த செல்வாக்கு பெற்றுள்ளதாக தெரிவித்தனர். கடந்த ஆண்டு கருத்து கணிப்பின்போது, 28 சதவீத இந்தியர்கள் மட்டுமே அப்படி தெரிவித்தனர்.

49 சதவீத இந்தியர்கள், சமீப ஆண்டுகளில் அமெரிக்காவின் செல்வாக்கு வலுவடைந்து வருவதாகவும், 41 சதவீத இந்தியர்கள் ரஷியாவின் செல்வாக்கு வலுவடைந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

சீனாவின் செல்வாக்கு பற்றிய இந்தியர்களின் பார்வை, ஆதரவாகவும், எதிராகவும் கலந்து காணப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் ஜி-20 மாநாடு நடக்க உள்ள நிலையில், இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.



Next Story