மேகதாது அணைக்கு ரூ.9 ஆயிரம் கோடி நிதி


மேகதாது அணைக்கு ரூ.9 ஆயிரம் கோடி நிதி
x

மேகதாது அணை கட்ட ரூ.9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும், கர்நாடகத்தில் பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிக்கப்படும் என்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. மேலும் இதில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரமும், பஸ்களில் இலவச பயண திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:-

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வாக்காளர்களை கவர அறிவிப்புகள்

இதற்கிடையே வாக்காளர்களை கவரும் வகையில் அரசியல் கட்சிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜனதாதளம் (எஸ்), பா.ஜனதா கட்சிகள் தேர்தல் அறிக்கையை ஏற்கனவே வெளியிட்டுள்ளன.

ஜனதாதளம்(எஸ்) கட்சி, ஆண்டுக்கு 5 சமையல் கியாஸ் சிலிண்டர்களும், விவசாயிகளை திருமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதி அளித்துள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதுபோல் பா.ஜனதா கட்சி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தினமும் அரை லிட்டர் பால் இலவசமாக வழங்கப்படுவதாகவும், ஆண்டுக்கு 3 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும், பொதுசிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளது. இவை வாக்காளர்களை கவரும் வகையில் உள்ளது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அந்த தேர்தல் அறிக்கையை பெங்களூருவில் நேற்று வெளியிட்டார். அதில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 நிதி உதவி, வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை, அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 10 கிலோ அரிசி இலவசம் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.

மேலும் அதில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகள் விவரம் வருமாறு:-

மேகதாது அணை திட்டத்திற்கு நிதி

* உள்ளாட்சி தேர்தல்கள் குறித்த காலத்திற்குள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* அரசு துறைகளில் அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படும்.

* அரசு ஊழியர்களுக்கு இணையான வசதிகள் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு செய்து கொடுக்கப்படும்.

* அரசு கல்லூரிகளில் பணியாற்றும் விரிவுரையாளர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும்.

* மேகதாது அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்ற ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். அதுபோல் மகதாயி திட்டத்தை அமல்படுத்த ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

* அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.11,500-ல் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும். ஓய்வு பெறும்போது ரூ.3 லட்சம் வழங்கப்படும்.

* மினி அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.7,500-ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும். அவர்களுக்கு ஓய்வூதிய பலன் ரூ.2 லட்சம் வழங்கப்படும்.

* ஆஷா ஊழியர்களுக்கு மாதாந்திர ஊதியம் ரூ.5,000-ல் இருந்து ரூ.8 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

* மதிய உணவு திட்ட சமையல்காரர்களுக்கு சம்பளம் ரூ.3,500-ல் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்படும்.

உள்கட்டமைப்பு வசதிகள்

* போலீசாருக்கு இரவு பணி படியாக மாதம் ரூ.5 ஆயிரமும், மேலும் போலீசாருக்கு ஆண்டுக்கு ஒரு மாத சம்பளம் கூடுதலாகவும் வழங்கப்படும்.

* கோர்ட்டுகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.

* ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்தில் பா.ஜனதா அரசால் கொண்டு வரப்பட்ட அனைத்து மக்கள் விரோத சட்டங்களும் வாபஸ் பெறப்படும்.

* அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் அதிவிரைவு இணைய 'வை-பை' வசதி ஏற்படுத்தப்படும்.

* 10 லட்சம் மக்கள்தொகைக்கு அதிகமாக உள்ள நகரங்களில் பெங்களூருவில் உள்ளது போல் டெண்டர் சூர் திட்டத்தில் சாலைகள் மேம்படுத்தப்படும்.

* விவசாயிகளுக்கான வட்டியில்லா கடன் ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.

* இயற்கை பேரிடர்களை சமாளிக்க ரூ.5 ஆயிரம் கோடி கோடி நிதி ஒதுக்கப்படும்.

* பாலுக்கான ஊக்கத்தொகை லிட்டருக்கு ரூ.7 ஆக உயர்த்தப்படும்.

படகு கட்டுமான தளம்

* ஆடு வளர்ப்பவர்களின் கடன் ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும்.

* 2 மாடுகள் வாங்க பெண்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

* மீனவர்களுக்கு ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

* மங்களூருவில் படகு கட்டுமான தளம் அமைக்கப்படும்.

* ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு ஆண்டுக்கு 500 லிட்டர் டீசல் வரி இல்லாமல் வழங்கப்படும்.

* நாட்டு படகில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும்.

* 5 ஆண்டுகளில் நீர்ப்பாசனத்துறையில் ரூ.1½ லட்சம் கோடி செலவிடப்படும்.

* காவிரி உள்பட பல்வேறு ஆறுகளை சுத்தப்படுத்த ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* பிற மாநிலங்களுக்கு மின்சாரம் விற்பனை செய்யும் விலைக்கு இணையாக தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணம் மாற்றி அமைக்கப்படும்.

* சுற்றுலா வளர்ச்சிக்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

மின்சார வாகனங்கள்

* சுயதொழில் செய்வோருக்கு ரூ.10 லட்சம் வரையில் 6 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும்.

* கிருஹ ஜோதி திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

* மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் கட்டமைப்பு வசதிகள், பேட்டரி உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்க ஜி.எஸ்.டி. வரியில் 50 சதவீதம் வரி விலக்கு, சிறப்பு மானியம் அளிக்கப்படும்.

* சக்தி திட்டத்தின் கீழ் கே.எஸ்.ஆர்.டி.சி., பி.எம்.டி.சி. பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப்படும்.

* 2 ஆண்டுகளுக்குள் 50 சதவீத அரசு பஸ்கள் மின்சார பஸ்களாக மாற்றப்படும்.

* நெடுஞ்சாலைகளில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் வசதி ஏற்படுத்தப்படும்.

* மாணவ-மாணவிகள், மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.

* அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் குடும்பத்தில் தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.

* கிராமங்களில் நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும்.

சத்துணவு சேர்க்கப்படும்

* அரசு பள்ளி-கல்லூரிகளில் காலியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும்.

* தேசிய கல்வி கொள்கையை நிராகரிப்போம், புதிதாக மாநில கல்வி கொள்கை உருவாக்கப்படும்.

* மதிய உணவு திட்டத்தில் மேலும் சத்துணவு சேர்க்கப்படும்.

* 2,500 பள்ளிகள் 'ஸ்மார்ட்' பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

* நெடுஞ்சாலைகளில் 100 கிலோ மீட்டருக்கு ஒரு உயர்தர ஆஸ்பத்திரி தொடங்கப்படும்.

* தாலுகாக்களில் குறைந்த விலை மருந்து கடைகள் திறக்கப்படும்.

* புனித் ராஜ்குமார் இதய சுகாதார திட்டத்தின் கீழ் டாக்டர்கள், கிளினிக்குகளுக்கு மானியம் வழங்கப்படும்.

* பல்வேறு வீட்டு வசதி திட்டங்களின் கீழ் பயனாளிகள் பெற்றுள்ள கடனை தள்ளுபடி செய்வோம்.

பஜ்ரங்தள அமைப்புக்கு தடை

* கிருஹ லட்சுமி திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

* விதவை பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும்.

* சிறுபான்மையின பெண்களுக்கு சுயதொழில் செய்ய ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

* திருநங்கைகள் மேம்பாட்டு வாரியம் ரூ.200 கோடியுடன் உருவாக்கப்படும்.

* திருநங்கைகள் கணக்கெடுப்பு நடத்தப்படும்.

* 25 ஆயிரம் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

* ஆட்டோ டிரைவர்கள், டாக்சி டிரைவர்கள் மேம்பாட்டு வாரியம் அமைக்கப்படும்.

* பத்திரிகையாளர்கள் மேம்பாட்டு வாரியம் ரூ.500 கோடி முதலீட்டில் அமைக்கப்படும்.

* பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிக்கப்படும்.

மெட்ரோ ரெயில் திட்டம்

* கல்யாண கர்நாடக வளர்ச்சிக்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

* மைசூரு கர்நாடக பகுதியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

* பெங்களூருவில் நகரின் அனைத்து பகுதிகளுக்கும் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படும்.

* பெங்களூருவில் இருந்து துமகூரு வரை மெட்ரோ ரெயில் திட்டம் அமல்படுத்தப்படும்.

* பெங்களூரு மெகா திட்ட குழு உருவாக்கப்படும்.

* பெங்களூருவின் மத்திய பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுரங்க பாதைகள் அமைக்கப்படும்.

* புறநகர் ரெயில் திட்ட பணிகள் விரைவுபடுத்தப்படும்.

* பெங்களூருவில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.


Next Story